செய்திகள்
டிரோன் கேமரா

ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட பகுதிகள் டிரோன் கேமரா மூலம் கண்காணிப்பு

Published On 2020-04-13 18:08 IST   |   Update On 2020-04-13 18:08:00 IST
ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்க ஏதுவாக ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு செய்ய முடிவு செய்யப்பட்டது.
செந்துறை:

அரியலூர் மாவட்டத்தில் இருந்து கடந்த மாதம் டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் 5 இஸ்லாமியர் கலந்துகொண்டனர். அவர்களில் செந்துறையைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து செந்துறை பகுதியில் உள்ள ஆறு இடங்களில் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு அங்கே போலீசார் சோதனைச்சாவடி அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்க ஏதுவாக ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதன்படி இந்த பணியினை அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் செந்துறை காவல் நிலையம் முன்பு தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் அளித்த பேட்டியில் அரியலூர் மாவட் டத்தில் 144 தடை உத்தரவை தொடர்ந்து 11 இடங்களில் சோதனைச்சாவடி அமைத்து கண்காணிக்கபடுகிறது. மாவட்டத்திற்கு உள்ளே வரும் அத்தியாவசிய வண்டிகளும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கபடுகிறது. ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட பகுதியில் இருந்து யாரும் வெளியே செல்லாமலும் யாரும் உள்ளே வராமலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம்.

இந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அவரது வீட்டிற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அரியலூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதே போன்று அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஆகையால் பொது மக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியேவர வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் உடையார்பாளையம் கோட்டாட்சியர் பூங்கோதை, மாவட்ட திட்ட அலுவலர் சுந்தரராஜன், அரியலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு திரு மேனி, தாசில்தார் முத்து கிருஷ்ணன், வட்டாரவளர்ச்சி அலுவலர் சிவாஜி, போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் தன்ராஜ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Similar News