செய்திகள்
கைது

மஞ்சூர் அருகே வனப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சிய 5 பேர் கைது

Published On 2020-04-13 17:34 IST   |   Update On 2020-04-13 17:34:00 IST
மஞ்சூர் அருகே வனப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சிய 5 பேரை போலீசார் மாறு வேடத்தில் காத்திருந்து பிடித்தனர்.

மஞ்சூர்:

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே தமிழக கேரளா எல்லையை ஒட்டியுள்ளது கிண்ணக்கொரை. இங்குள்ள வனப்பகுதியில் சிலர் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனையில் ஈடுபடுவதாக மஞ்சூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதை தொடர்ந்து மாவட்ட எஸ்.பி. சசிமோகன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் தவுலத்நிஷா மேற்பார்வையில் மஞ்சூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் போலீசார் கிண்ணக்கொரை சுற்றுபுற பகுதிகளில் மாறு வேடத்தில் கண்காணித்து வந்தனர். இந்தநிலையியில் கிண்ணக்கொரை அடுத்துள்ள வனப்பகுதியில் புகை வருவதை கண்டு சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர்.

அப்போது அங்கு சிலர் கள்ளச்சாரயம் காய்ச்சி கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் இருந்து கேன்களில் வைத்திருந்த 116 லிட்டர் கள்ளச்சாரயத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

அதில் அவர்கள் கேரளா மாநிலம் மண்ணார்காடு பகுதியை சேர்ந்த சுகு (32), கிண்ணக்கொரை அருகே தனியகண்டி பகுதியை சேர்ந்த சரவணகுமார் (28), மூர்த்தி (22), கேரளா மாநிலம் தொடுபுழா இடுக்கியை சேர்ந்த பினு (40), கேரளா காவலன்காடு பகுதியை சேர்ந்த பால் (61) என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News