செய்திகள்
தற்கொலை

அரியலூரில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட தொழிலாளி தற்கொலை

Published On 2020-04-11 16:54 IST   |   Update On 2020-04-11 16:54:00 IST
அரியலூரில் கொரோனாவுக்கான தனி வார்டில் அனுமதிக்கப்பட்ட தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர்:

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள கடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். கூலி தொழிலாளியான நாராயணன்(வயது 65), கேரள மாநிலத்தில் வேலை பார்த்தார். இந்நிலையில் கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவியது. மேலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருந்ததையொட்டி நாராயணன், கேரளாவில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பினார். ஆனால் இது பற்றி அவர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

கடந்த 1-ந் தேதி முதல் அவருக்கு கடுமையான காய்ச்சல், இருமல் ஏற்பட்டது. கடையில் மருந்து வாங்கி சாப்பிட்டும் குணமாகவில்லை. இதனால் அவர் கடந்த 6-ந்தேதி அரியலூரில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார். அப்போது டாக்டர்கள் அவரிடம் விசாரித்தபோது, அவர் கேரளாவுக்கு சென்று திரும்பியது தெரியவந்தது. இதையடுத்து அவரை கொரோனாவுக்கான தனி வார்டில் அனுமதித்தனர். 7-ந் தேதியன்று அவருடைய சளி, ரத்தம் போன்றவற்றை எடுத்து பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதற்கான முடிவு இன்னும் வரவில்லை.

இந்நிலையில் தனி வார்டில் இருந்ததால் மன உளைச்சலுக்கு ஆளான நாராயணன், அவர் தங்கி இருந்த அறையிலேயே நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மருத்துவமனை டாக்டர்கள், அரியலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரியலூரில் கொரோனாவுக்கான தனி வார்டில் அனுமதிக்கப்பட்ட தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News