வேலூரில் கொரோனாவால் ஒருவர் பலி - 28,500 வீடுகளில் மருத்துவ குழு சோதனை
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் இதுவரை 6 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். வேலூரில் நேற்று ஒருவர் இறந்தார். அவருக்கு கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. உயிரிழந்தவர் வசித்த சைதாப்பேட்டை பகுதியில் 5 துறைகளை சேர்ந்த 200 அலுவலர்கள் வீடு வாரியான கணக்கெடுப்பு பணியிலும், மேலும் 50 பேர் கிருமி நாசினி தெளிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து வேலூர் மாநகராட்சியில் உள்ள 2 -வது மண்டல பகுதி முழுவதும் முழு சுகாதார பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. ராட்சத எந்திரம் மூலம் தடுப்பு மருந்து தெளித்து வருகின்றனர்.
2-வது மண்டலத்தில் உள்ள சத்துவாச்சாரி, காகிதப்பட்டறை, ஆற்காடு சாலை, சைதாப்பேட்டை பகுதி முழுவதும் வீடு வீடாக மருத்துவ பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று சத்துவாச்சாரியில் 225 பேர் கொண்ட குழுவினர் களமிறக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களை சோதனை செய்து வருகின்றனர்.
பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் போன்றவை உள்ளதா என அவர்கள் ஆய்வு செய்தனர். இந்த கணக்கெடுப்பு பணியை என்ஜினியர் சீனிவாசன் இன்று தொடங்கி வைத்தார்.
இதில் 2-வது மண்டல உதவி கமிஷனர் மதிவாணன் சுகாதார அலுவலர் சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இன்று முதல் 2 வது மண்டலத்தில் உள்ள 28 ஆயிரத்து 500 வீடுகளில் மருத்துவ குழுவினர் சோதனை நடத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பரிசோதனைக்கு வரும் மருத்துவ குழுவினருக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அவர்களுக்கு இடையூறு செய்து பணிகளை தடுத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
யாருக்காவது சளி இருமல் காய்ச்சல் போன்றவை இருந்தால் அல்லது பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கு இருந்தாலோ உடனடியாக கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை அல்லது சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.