செய்திகள்
கிருமி நாசினி நடைபாதையை கலெக்டர் பார்வையிட்ட காட்சி.

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கிருமி நாசினி நடைபாதை அமைப்பு

Published On 2020-04-07 12:05 GMT   |   Update On 2020-04-07 12:05 GMT
கொரோனா நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்கும் விதமாக வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கிருமி நாசினி நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

வேலூர்:

வேகமாகப் பரவி வரும் கொரோனா நோய்த் தொற்றைத் தடுக்க வேலூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தவிர, மாவட்டம் முழுவதும் மக்கள் அதிகளவில் வந்து செல்லும் பகுதிகளில் கிருமி நாசினிகள் தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதன்தொடர்ச்சியாக, வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பாதுகாப்புக்காக கிருமி நாசினி நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. கோவில்களில் மெட்டல் டிடெக்டர் பரிசோதனை நுழைவு வாயில் வழியாக செல்வதைப் போல் கிருமி நாசினி தெளிக்கும் நுழைவு வாயிலை ஏற்படுத்தி கலெக்டர் அலுவல வளாகத்தில் வைத்துள்ளனர்.

காலையில் பணிக்கு வரும் அரசு ஊழியர்கள், அலுவலகப் பணிக்காக வரும் பொதுமக்கள் அனைவரும் இந்த நடைபாதையில் நுழைவதன் மூலம் அவர்கள் மீது கிருமி நாசினி மருந்து தெளிக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனால், தொற்று நோய் பரவாமல் தடுக்க முடியும் என்பதற்காக இத்தகைய நடைமுறை நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

கிருமி நாசினி நடைபாதையின் செயல்பாட்டை கலெக்டர் சண்முகசுந்தரம் பார்வையிட்டார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News