செய்திகள்
கபசுர குடிநீர்

கோத்தகிரி பேரூராட்சியில் சுகாதார பணியாளர்களுக்கு கபசுர குடிநீர் வினியோகம்

Published On 2020-04-04 16:18 GMT   |   Update On 2020-04-04 16:18 GMT
கோத்தகிரி பேரூராட்சியில் சுகாதார பணியாளர்களுக்கு கபசுர குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
கோத்தகிரி:

கோத்தகிரி பேரூராட்சியில் சுகாதார மற்றும் தூய்மை பணியாளர்கள் 80-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் போதிய பாதுகாப்பு உபகரணங்களுடன் பணிபுரிந்து வந்தாலும், அவர்களுக்கு சுவாசம் தொடர்பான நோய் தொற்று ஏற்படாமல் இருக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

கோத்தகிரி அரசு மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவு சார்பில் சுகாதார பணியாளர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் செயல் அலுவலர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் ரஞ்சித், டாக்டர் கார்த்திகா ஆகியோர் கபசுர குடிநீரை பணியாளர்களுக்கு வழங்கினர். அதன் பயன்கள் குறித்து விளக்கப்பட்டது.

இதுகுறித்து டாக்டர் கார்த்திகா கூறும்போது, சுக்கு, மிளகு, திப்பிலி, இலவங்கம், சிறு காஞ்சொறி வேர், அக்ரகாரம், முள்ளி வேர், ஆடாதொடை இலை, கற்பூரவள்ளி இலை, கோஷ்டம், சீந்தில் தண்டு, சிறு தேக்கு, வட்ட திருப்பி வேர், கோரைக்கிழங்கு, கடுக்காய் தோல் என 15-க்கும் மேற்பட்ட மூலிகை பொருட்கள் கலந்து கபசுர குடிநீர் செய்யப்படுகிறது. இந்த பொடியை காய்ச்சி சுண்ட வைத்து வடிகட்டி கால் டம்ளர் குடித்து வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் சுவாச பாதையில் ஏற்படும் தொற்றுகளை நீக்க உதவும் என்றார்.
Tags:    

Similar News