செய்திகள்
கைது

வேலூர் அருகே துப்பாக்கி சூடு நடத்திய கும்பலிடம் சாராயம் வாங்கிய 6 பேர் கைது

Published On 2020-04-04 16:30 IST   |   Update On 2020-04-04 16:30:00 IST
வேலூர் அருகே துப்பாக்கி சூடு நடத்திய கும்பலிடம் இருந்து சாராயம் வாங்கி வந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6 மோட்டார்சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
வேலூர்:

வேலூரை அடுத்த அரியூர் அருகே புலிமேடு மலைப்பகுதியில் ஒரு கும்பல் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்தது. 144 தடை உத்தரவையொட்டி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் மதுபிரியர்களின் பார்வை சாராயம் பக்கம் திரும்பியது. இதனால் அந்த மலைப்பகுதிக்கு சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பலர் சாராயம் குடிக்க சென்றனர்.

மதுபிரியர்கள் ஏராளமானோர் சென்று வந்ததால் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளதாக கருதிய புலிமேடு பகுதி கிராம பொதுமக்கள் சாராயம் விற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது சாராயம் விற்பதை தட்டிக் கேட்க சென்ற பொதுமக்கள் மீது சாராய கும்பல் துப்பாக்கி சூடு நடத்தியதில் 3 பேர் காயமடைந்தனர். இது குறித்த புகாரின் பேரில் அரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாராய கும்பலை தேடி வருகின்றனர்.

இந்த துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு பின்னரும் மலைப்பகுதியில் சாராய விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. கும்பலை பிடிக்க செல்லும் போது போலீசாரை கண்டதும் மலைப்பகுதியில் பதுங்கி விடுகின்றனர். எனவே போலீசாருக்கு குற்றவாளிகளை பிடிப்பது சவாலாகவே உள்ளது. அந்த மலைப்பகுதிக்கு பலர் மோட்டார்சைக்கிளில் சென்று சாராயம் வாங்கி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நேற்று அந்த மலைப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மலையடிவாரத்தில் மோட்டார்சைக்கிளில் 6 பேர் வந்தனர். அவர்களை போலீசார் பிடித்து சோதனை செய்தபோது அவர்களிடம் ஏராளமான சாராய பாக்கெட்டுகள் இருந்தன. அவர்கள் துப்பாக்கி சூடு நடத்திய கும்பலிடம் இருந்து குடிப்பதற்காகவும், விற்பதற்காகவும் சாராயம் வாங்கி வந்தது போலீசாருக்கு தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் 60 லிட்டர் சாராயம், 6 மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மலைப்பகுதிக்கு சாராயம் வாங்க வருபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் எச்சரித்துள்ளனர். 

Similar News