செய்திகள்
செல்போன்

கொரோனா பாதிக்கப்பட்ட பெண்ணின் செல்போனை பயன்படுத்திய மருத்துவ தூய்மை பணியாளர்கள் சஸ்பெண்டு

Published On 2020-03-29 10:26 GMT   |   Update On 2020-03-29 10:26 GMT
கொரோனா பாதிக்கப்பட்ட பெண்ணின் செல்போனை பயன்படுத்திய மருத்துவ தூய்மை பணியாளர்கள் 3 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
அரியலூர்:

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த 25 வயது பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனையில் நேற்று உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து அந்த பெண்ணின் மகள், தாய், தந்தை, அண்ணன் உள்ளிட்ட அவரது குடும்பத்தை சேர்ந்த 14 பேரை மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்து வருகின்றனர். அவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு திருச்சிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அரியலூர் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் பாதிக்கப்பட்ட பெண், தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். மேலும், 14 பேரையும் அவர்களது வீட்டில் தனிமைப்படுத்தி மருத்துவக் குழுவினர் கண்காணித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் சென்னை வேளச்சேரியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் பணியாற்றியுள்ளார்.

அவர் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்ட பிறகு கடந்த 25-ந்தேதி அரியலூர் வந்துள்ளார். அன்றைய தினம் அரியலூர் அரசு மருத்துவமனையில் காய்ச்சல் அறிகுறிகளுடன் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும், வீட்டில் இருந்த போது அவர் யாருடன் தொடர்பில் இருந்துள்ளார். வெளியிடங்களுக்கு சென்று வந்தாரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



மேலும் சென்னையில் பணியாற்றியபோது யார், யாருடன் தொடர்பில் இருந்தார், எங்கெங்கு சென்றார் உள்ளிட்ட விபரங்களையும் சுகாதாரத்துறையினர் சேகரித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் அந்த பெண் கொரோனா வார்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தபோது அவரது செல்போனில் டிக்டாக் செய்து பதிவிட்டுள்ளார். அப்போது இம்மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவ ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 2 பெண்கள் உள்ளிட்ட 3 பேர் கொரோனா பாதிக்கப்பட்டவரின் செல்போனை வாங்கி பயன்படுத்தி உள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, இந்த டிக்டாக் வீடியோ மற்றும் அவரது செல்போனை வாங்கிய மருத்துவ தூய்மை பணியாளர்கள் 2 பெண்கள் ஒரு ஆண் என 3 பேர் பயன்படுத்தியதை மருத்துவ அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இதனையடுத்து மருத்துவ தூய்மை பணியாளர்கள் 3 பேரையும் அதிகாரிகள் பணி நீக்கம் செய்துள்ளனர். மேலும் அந்த 3 பேரையும் கொரோனா வார்டில் தனிமைப்படுத்தியுள்ளனர். அவர்கள் கொரோனா பாதிக்கப்பட்ட பெண்ணின் செல்போனை வாங்கி பயன்படுத்தியதால் இவர்களுக்கு கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதால் 14 நாட்கள் இவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News