செய்திகள்
கலெக்டர் ரத்னா

கொரோனா வைரஸ், செவித்திறன் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் - கலெக்டர் ரத்னா தொடங்கி வைத்தார்

Published On 2020-03-11 23:28 IST   |   Update On 2020-03-11 23:28:00 IST
கொரோனா வைரஸ் மற்றும் செவித்திறன் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் ரத்னா தொடங்கி வைத்தார்.
அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் செவித்திறன் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் ரத்னா தலைமை தாங்கி, ஊர்வலத்தை தொடங்கி வைத்து பேசுகையில், அரியலூர் மாவட்டத்தில் தேசிய செவித்திறன் தின விழிப்புணர்வு பிரசாரமானது வருகிற 16-ந் தேதி வரை நடைபெறவுள்ளது. காது கேளாமை பற்றிய விழிப்புணர்வை அனைவரும் அறிந்து கொள்ள செவித்திறன் தினம் கொண்டாடப்படுகிறது என்றார்.

அரியலூர் அரசு தலைமை மருத்துவமனையில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலம் அரியலூர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக அண்ணா சிலை அருகே சென்றடைந்தது. மேலும், கொரானோ வைரசை தடுக்க நம் கைகளை சுத்தமாக கழுவுவோம், கைக்குட்டைகளை பயன்படுத்துவோம், கை கொடுப்பதை தவிர்த்து, வணக்கம் செலுத்துவோம், கூட்டமாக கூடுவதை தவிர்ப்போம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி மாணவ- மாணவிகள் முழக்கமிட்டு ஊர்வலமாக சென்றனர்.

இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி தலைவர் டாக்டர் முத்துகிருஷ்ணன், துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) ஹேமசந்த்காந்தி, தலைமை மருத்துவ அலுவலர் ரவிசங்கர், மண்டல மருத்துவ அலுவலர் ரமேஷ், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பொம்மி மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News