இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுக பொது தேர்தலில் தோல்வியை சந்திக்கும்- தினகரன்
ஆற்காடு:
ஆற்காடு அருகே கலவையில் நடந்த திருமண விழாவில் கலந்து கொண்ட அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
தமிழக அரசு காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து இருப்பது மக்களை ஏமாற்றும் வேலை.
ஏற்கனவே அங்கு ஹைட்ரோகார்பன், மீத்தேன் எடுக்கும் திட்டங்களுக்கு அனுமதி கொடுத்து பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.
அதுகுறித்து அரசு எதுவும் சொல்லாமல் காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என அறிவித்துவிட்டோம் என கூறுகின்றனர்.
சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதை காரணம் காட்டி நாங்கள் சட்டத்தை மத்திய அரசுக்கு அனுப்பி விட்டோம். அவர்கள் அதை கிடப்பில் வைத்திருக்கிறார்கள் என கூறி மத்திய அரசு மீது பழி போட்டு மக்களை ஏமாற்றுவதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு எடுத்துள்ள தந்திரமான நடவடிக்கை இது.
போராட்டங்கள் நடைபெறுவதற்கு காரணமே தி.மு.க. தான். தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவை பாதிக்கின்ற, மக்களை பாதிக்கின்ற எந்த சட்டங்கள் வருகின்ற போதும் அதை உடனிருந்து கையெழுத்து போட்டு ஆதரிப்பது தி.மு.க.
வாஜ்பாய் ஆட்சியில் கூட்டணியில் இருந்த தி.மு.க. அப்போது கொண்டு வரப்பட்ட குடியுரிமை சட்ட திருத்தத்தை ஆதரித்தது. அதே போல் மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்கள் தமிழகத்தில் வருவதற்கு கையெழுத்து போட்டது தி.மு.க. தான். இவற்றை மறைப்பதற்காகவும், மக்களை ஏமாற்றுவதற்காகவும் போராட்டங்களை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நடத்தி வருகிறார்.
மதச்சார்பற்ற நாட்டில், மதத்தின் அடிப்படையில் சிலருக்கு உரிமை கிடைக்காதது தவறு. குடியுரிமை சட்ட திருத்தத்தால் இலங்கை தமிழர்களும் பாதிக்கப்படுகிறார்கள். மக்களை பாதிக்காத வகையில் மசோதாக்கள் இருக்க வேண்டும்.
இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. பொது தேர்தலில் தோல்வியை சந்திக்கும்.
வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் கூட்டணியில் உள்ள கட்சிகள் இருக்கின்ற இடம் தெரியாமல் போகும். அ.தி.மு.க. ஆட்சியில் உள்ள காரணத்தினாலே சில கட்சிகள் அ.தி.மு.க.வோடு கூட்டணி வைத்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.