செய்திகள்
ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் திருப்பலி நடந்தது.

கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது- சாம்பலால் சிலுவை அடையாளமிட்டு வழிபாடு

Published On 2020-02-26 10:30 GMT   |   Update On 2020-02-26 10:30 GMT
தவக்காலம் தொடங்கியதன் அடையாளமாக ஈரோட்டில் புனித அமல அன்னை ஆலயத்தில் கிறிஸ்தவர்களின் நெற்றியில் பங்குத்தந்தை சாம்பலால் சிலுவை அடையாளம் இட்டார்.

ஈரோடு:

இயேசு கிறிஸ்து பாடுபட்டு சிலுவையில் உயிர்விட்ட நாள் புனித வெள்ளியாக உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்படுகிறது.

இதை முன்னிட்டு 40 நாட்கள் நோன்பு இருப்பது வழக்கம். இந்த நோன்பு காலம் தவக்காலம் என்று அழைக்கப்படுகிறது. தவக்காலத்தின் முதல் நாள் சாம்பல் புதன் அல்லது திருநீற்றுப் புதனாக கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி இன்று தவக்காலம் தொடங்கியது.

இதையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று காலை சிறப்பு திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டன.

ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை ஜான் சேவியர் குழந்தை தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது.

தவக்காலம் தொடங்கியதன் அடையாளமாக கிறிஸ்தவர்களின் நெற்றியில் பங்குத்தந்தை சாம்பலால் சிலுவை அடையாளம் இட்டார். இந்த சாம்பல், கடந்த ஆண்டு குருத்தோலை திருநாளின் போது ஊர்வலமாக எடுத்துச்சென்று வீடுகளில் வைக்கப்பட்டு இருந்தவையாகும். அவற்றை சேகரித்து சுட்டு சாம்பலாக்கி நெற்றியில் பூச பயன்படுத்தப்பட்டது.

சாம்பல் நெற்றியில் பூசும்போது மனிதனே மண்ணாக இருக்கின்றாய் மண்ணுக்கே திரும்புவாய் என்று கூறி பங்குத்தந்தை ஒவ்வொருவரின் நெற்றியிலும் சிலுவை அடையாளம் வரைந்தார். இன்று மாலையும் திருப்பலி நடக்கிறது.

Tags:    

Similar News