செய்திகள்
கோப்பு படம்

குன்னூரில் முறையாக குடிநீர் வழங்காவிட்டால் போராட்டம் - பொதுமக்கள் எச்சரிக்கை

Published On 2020-02-18 11:19 GMT   |   Update On 2020-02-18 11:19 GMT
குன்னூரில் முறையாக குடிநீர் வழங்கவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அப்பகுதி மக்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
குன்னூர்:

நீலகிரி மாவட்டம் குன்னூர் நகரில் 30 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கு ரேலியா அணை, கரன்சி, பந்துமி, கிரேஸ் ஹில், மற்றும் வண்ணாரப்பேட்டை நீர் தேக்கத்தில் இருந்து தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது ரேலியா அணையில் தண்ணீர் முழு கொள்ளளவு இருந்தும் பொதுமக்களுக்கு சீராக குடிநீர் வினியோகம் செய்வதில்லை.

குன்னூர் 12-வது வார்டு ஹவுசிங் யூனிட் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். அப்பகுதியில் தனியாக 3 தண்ணீர் தேக்க தொட்டிகள் உள்ளன. இதில் தண்ணீர் இருந்தும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்து 20 நாட்களுக்கு மேல் ஆகியுள்ளது. இதைப்பற்றி குன்னூர் நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டால் முறையான பதில் இல்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

நகராட்சியில் பல இடங்களில் இரவு நேரங்களில் 1 மணி நேரம் மட்டும் தண்ணீர் வினியோகம் செய்து நிறுத்தி விடுகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு தண்ணீர் தேவையான அளவு கிடைப்பதில்லை. முறையாக குடிநீர் வழங்கவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அந்த பகுதி மக்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
Tags:    

Similar News