செய்திகள்
சிறுத்தை நடமாட்டம்

திம்பம் பஸ் நிறுத்தம் அருகே நடமாடும் சிறுத்தை- பயணிகள் கவனமாக இருக்க எச்சரிக்கை

Published On 2020-02-07 12:16 GMT   |   Update On 2020-02-07 12:16 GMT
திம்பம் வனசோதனை சாவடி அருகே சிறுத்தை நடமாட்டத்தை அந்த வழியாக சென்ற பயணிகளும் கடைகாரர்களும் பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் மலை உச்சியில் திம்பம் மலை உச்சி உள்ளது.

திம்பத்தில் இருந்து நேராக சென்றால் ஆசனூர் வழியாக கர்நாடகா செல்லலாம். இதேபோல் இடதுபுறமாக சென்றால் தலமலை போய் தாளவாடி போகலாம். இந்த தலமலை வனப்பகுதி அடர்ந்த காடாகும்.

தலைமலை செல்ல திம்பத்தில் உள்ள வனசோதனை சாவடியில் முன்அனுமதி பெற்றுதான் போக வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திம்பம் வனசோதனை சாவடியில் இரவில பணியில் இருந்த கிருஷ்ணனை அங்கு வந்த சிறுத்தை அடித்து கொன்று பாதி உடலை தின்றது. இந்த சம்பவம் இன்றும் வனஊழியர்களை பீதியில் ஆழ்த்தும்.

வனசோதனை சாவடியில் இருந்து 50 அடி தூரமே தள்ளி சிறுநீர் கழிக்க சென்ற வனகாப்பாளர் கிருஷ்ணன் மீது அருகே உள்ள மரத்தில் இருந்த சிறுத்தை பாய்ந்து அவரை கொன்றது.

இந்த சம்பவத்துக்குப் பிறகு திம்பம் வனசோதனை சாவடியில் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

சிறுத்தையால் கொல்லப்பட்ட கிருஷ்ணன் நினைவாக தலமலை ரோட்டுக்கு கிருஷ்ணன் ரோடு என பெயரிடப்பட்டு உள்ளது.

அதே திம்பம் மலைப் பாதையில் மேலும் சிலரை  சிறுத்தைகள் கொன்று வேட்டையாடி உள்ளது.

கடந்த சில நாட்களாக திம்பம் வனசோதனை சாவடி அருகே சிறுத்தை நடமாட்டத்தை அந்த வழியாக சென்ற பயணிகளும் கடைகாரர்களும் பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

பொதுவாக அந்த பகுதியாக தாளவாடி, கர்நாடகா மாநிலம் செல்லும் பல வாகனங்கள் திம்பத்தில் நின்று செல்லும்.

வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் வாகனத்தை நிறுத்தி திம்பத்தில் டீ, காபி, ராகி வடை, சுண்டல் வாங்கி சாப்பிட்டு விட்டு செல்வார்கள்.

இதனால் பகல் மற்றும் இரவு நேரங்களில் திம்பத்தில் பயணிகளும் பொது மக்களும், கடை ஊழியர், உரிமையாளர்களும் கவனமாக இருக்கும்படி வனத்துறையினர் எச்சரித்து உள்ளனர்.

இரவு நேரத்தில் பஸ் நிறுத்தத்தை விட்டு ரோட்டில் இறங்கி நடக்க வேண்டாம் எனவும் வனத்துறையினர் கேட்டுக் கொண்டு உள்ளனர்.

Tags:    

Similar News