செய்திகள்
மாணவி அனு பிருந்தா ஸ்ரீ, மாணவன் முகேஸ்வரன்

5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது: மாணவ-மாணவிகள் கருத்து

Published On 2020-02-05 11:24 GMT   |   Update On 2020-02-05 11:24 GMT
5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று ஈரோடு மாவட்ட மாணவ-மாணவிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஈரோடு:

தமிழகத்தில்5, 8-ம் வகுப்பு படிக்கும் மாணவ -மாணவிகளுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு மட்டுமன்றி அவர்களது பெற்றோருக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

இந்த அறிவிப்பு மாணவர்களுக்கு மன அழுத்தத்தை கொடுக்கும் என்று கூறி பெற்றோர்களும், ஆசிரியர் சங்கங்களும், பல்வேறு அரசியல் கட்சியினரும் உடனடியாக பொதுத் தேர்வு அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும் பழைய முறையே தொடரும் என்றும் அறிவித்தார்.

இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக 5, 8-வகுப்பு மாணவ-மாணவிகள் அவர்களது பெற்றோர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து ஈரோடு மாவட்ட மாணவ மாணவிகள் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து உள்ளனர்.

கோபியை அடுத்த வேங்கை அம்மையார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் வகுப்பு மாணவி அனு பிருந்தா ஸ்ரீ, மாணவன் முகேஸ்வரன் அகியோர் கூறும்போது, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு மாணவர் களுக்கு பொதுத்தேர்வு என்று அறிவித்தவுடன் நாங்கள் ஒரு வகையான பதட்டத்திற்கு உள்ளானோம். மேலும் இந்த அறிவிப்பு எங்களுக்கு மன அழுத்தத்தையும் தந்தது. மேலும் ஆசிரியர்கள் இதற்காக எங்களுக்கு தனியாக பயிற்சி வகுப்புகள் நடத்தினர்.

இந்நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் 5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து என்று அறிவித்துள்ளார். எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் மன நிம்மதியும் தந்துள்ளது. தமிழக அரசுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.

அந்தியூர் அருகே தவிட்டுபாளையம் அரசு பள்ளியில் படிக்கும் 8-ம் வகுப்பு மாணவ மாணவிகள் கூறும் போது, பொதுத்தேர்வு என்ற அறிவிப்பு எங்களுக்கு முதலில் பயத்தை உண்டாக்கியது. எங்களைவிட எங்களது பெற்றோர் பயந்து கொண்டே இருந்தனர். தற்போது பொதுத்தேர்வு ரத்து என்ற அறிவிப்பு எங்களுக்கு மன மகிழ்ச்சியை தந்துள்ளது என்றனர்.

இதேபோன்று பெருந்துறையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் வகுப்பு மாணவன் தினேஷ், மாணவி பிரியதர்ஷினி ஆகியோர் கூறும்போது, பொது தேர்வு என்று சொன்னவுடன் நாங்கள் பயந்தோம் தேர்வை எப்படி எதிர்கொள்வது என்று ஒருவிதமான பதட்டம் ஏற்பட்டது. மேலும் மூன்று பருவ பாடப் புத்தகத்திலும் சேர்த்து படிக்க வேண்டியதாக இருந்தது.

இதனால் நாங்கள் என்ன செய்வது என்று நினைத்திருந்த நேரத்தில் தேர்வு ரத்து செய்யப் பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது என்றனர் .

பவானி நகராட்சி நடுநிலை பள்ளியில் 5-ம் வகுப்பு மாணவிகள் ஜனனி, ஜோஷிகா ஆகியோர் கூறும்போது, பொதுத்தேர்வு என்றவுடன் நாங்கள் முதலில் பயந்து விட்டோம். எங்களது பெற்றோர்கள் எப்பபாத்தாலும் படி படி என்று எங்களைக் கட்டாயப்படுத்தினார். இந்த நிலையில் பொது தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளோம் என்றனர்.

Tags:    

Similar News