செய்திகள்
முக ஸ்டாலின்

திமுக ஆட்சி அமைந்தவுடன் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி- மு.க.ஸ்டாலின்

Published On 2020-01-26 16:37 GMT   |   Update On 2020-01-26 16:37 GMT
தமிழகத்தில் திமுக தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் விவசாயத்தை பாதிக்கும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று முக ஸ்டாலின் பேசியுள்ளார்.

மயிலாடுதுறை:

நாகை மாவட்டம் மயிலாடுதுறை சீர்காழி சாலை லட்சுமிபுரத்தில் நாகை வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன் தலைமை தாங்கினார். நாகை தெற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் கவுதமன் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தி.மு.க. தலைவரும் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான மு க ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார் அப்போது அவர் கூறியதாவது

தற்போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் நாகை மாவட்டத்தில் திமுக பெற்ற மிகப்பெரிய வெற்றி நான் எதிர்பார்க்காத வெற்றி ஆகும்.

உள்ளாட்சித் தேர்தலில் திமுக பெற்ற வெற்றி வருகிற சட்டசபை தேர்தலில் திமுக பெரும் வெற்றிக்கு முன்னோட்டம் ஆகும்.

மதத்தால் மொழியால் இனத்தால் பிளவுபடுத்த கூடிய ஒரு சூழ்நிலையை மத்திய அரசு செய்து கொண்டிருக்கிறது. மத்தியில் உள்ளவர்களுக்கு இந்தியும் சமஸ்கிருதமும் இரு கண்களாக தெரிகிறது. தமிழ் மொழியை பற்றி அவர்கள் கவலைப் படுவதே கிடையாது. எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தின் முதலமைச்சராக இல்லாமல் பாஜகவுக்கும், மோடிக்கும் பாதம் தாங்குகிற ஒரு முதலமைச்சராக செயல்பட்டு வருகிறார். அமைச்சர் பாண்டியராஜன் இந்தி சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் வளர்ச்சித்துறை அமைச்சராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

தஞ்சை பெரிய கோவிலில் சமஸ்கிருதத்தில் கும்பாபிஷேகம் நடத்த விரும்புகிறோம் என்று வெட்கப்படாமல் ஒரு அமைச்சர் சொல்கிறார். காசுக்காக அனைத்து உரிமைகளையும் காவு கொடுத்து விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடிய ஒரு ஆட்சி எடப்பாடி ஆட்சி. இந்த நிலையில் தமிழக அரசு சிறப்பான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்று மத்திய அரசு விருது கொடுக்கிறது.

நெடுஞ்சாலைத் துறையில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துகொண்டிருக்கிறது. அந்தத் துறையை கையில் வைத்துக் கொண்டிருப்பவர் எடப்பாடி பழனிச்சாமி. அவருக்கு வேண்டிய உறவினர்கள் மற்றும் பினாமிகளுக்கு ஒப்பந்த பணி திட்டமிட்டு கொடுக்கப்படுகிறது. இதை முறையாக விசாரணை செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இதுதொடர்பாக முகாந்திரம் இருப்பதாக கருதியதால் நெடுஞ்சாலைத்துறை முதலமைச்சர் வசம் உள்ளதாலும் சிபிஐ விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது.இதனை விசாரிக்க கூடாது என்று முதலமைச்சர் சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்று தடை உத்தரவு பெற்றார். இந்த வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இருந்தால் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆக இருந்திருக்க மாட்டார். இந்நேரம் கைதியாக இருந்திருப்பார். விரைவில் தமிழ்நாட்டில் திமுக தலைமையில் ஆட்சி மலரும் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து அமைச்சர்களின் ஊழல்களையும் வெளியே கொண்டு வருவோம்.


மேட்டூர் அணை சரியாக திறக்கப்படாததாலும் நீர்நிலைகள் சரியாக தூர்வாரப்படாத தாலும் டெல்டா மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி பொய்த்துவிட்டது. காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்ற எந்த முயற்சியையும் இந்த அரசு எடுக்கவில்லை. ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த மக்கள் கருத்தைக் கேட்க அவசியம் இல்லை என்றும் திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல் துறையின் அனுமதி பெற தேவையில்லை என்றும் மத்திய அரசு கூறுகிறது.

காவிரி டெல்டா பகுதியை பாலைவனமாக்கும் முழு முயற்சியில் மத்திய அரசு ஈடுபடுகிறது தமிழகத்தில் திமுக தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் விவசாயத்தை பாதிக்கும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார். 

Tags:    

Similar News