செய்திகள்
கலெக்டர் இன்னசென்ட் திவ்யா

ஊட்டியில் நாளை குடியரசு தின விழா: கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தேசியக்கொடி ஏற்றுகிறார்

Published On 2020-01-25 16:11 GMT   |   Update On 2020-01-25 16:11 GMT
ஊட்டியில் நாளை நடைபெறும் குடியரசு தின விழாவில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தேசியக்கொடி ஏற்றுகிறார். நீலகிரி மாவட்டம் முழுவதும் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
ஊட்டி:

இந்தியா முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தின விழா நாளை காலை 10 மணிக்கு ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. விழாவில் நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார். அதன் பின்னர் அவர் வாகனத்தில் சென்று காவல்துறையினரின் அணிவகுப்பை பார்வையிடுகிறார்.

அதனை தொடர்ந்து காவல்துறை, என்.சி.சி., பள்ளி மாணவ-மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். விழாவையொட்டி பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள், பழங்குடியினர்களின் பாரம்பரிய நடனம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது. விழாவில் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் மற்றும் மாவட்ட அளவிலான அதிகாரிகள் பலர் கலந்துகொள்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா செய்து வருகிறார்.

குடியரசு தின விழா நடக்க உள்ளதை அடுத்து, கடந்த 2 நாட்களாக காலை மற்றும் மாலையில் ஆயுதப்படை போலீசார், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர். விழா நடைபெறும் மைதானம் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, போலீசார் கண்காணித்து வருகின்றனர். விழாவையொட்டி மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. மேலும் பார்வையாளர்கள் விழாவை பார்க்கும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட உள்ளது.

குடியரசு தின விழாவை முன்னிட்டு சுற்றுலா நகரமான ஊட்டியில் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் போலீசார் சோதனை நடத்தி, அங்கு தங்கி இருப்பவர்களின் விவரங்களை சேகரித்து விசாரித்து வருகின்றனர். சந்தேகப்படும்படியாக யாரேனும் தங்கினால் தகவல் கொடுக்கும்படி போலீசார் தெரிவித்து உள்ளனர். லவ்டேல் சந்திப்பு, ஹில்பங்க், பிங்கர்போஸ்ட் உள்ளிட்ட இடங்களில் வாகன சோதனை நடத்தப்படுகிறது.

நீலகிரி மாவட்ட எல்லையில் அமைந்து உள்ள கக்கனல்லா, பாட்டவயல், நாடுகாணி, எருமாடு, பர்லியார், குஞ்சப்பனை, கெத்தை போன்ற சோதனைச்சாவடிகளில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.

வெளிமாநில வாகனங்கள் சோதனைக்கு பின்னரே நீலகிரிக்குள் அனுமதிக்கப்படுகிறது. விழாவையொட்டி போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின்படி, நீலகிரி முழுவதும் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags:    

Similar News