செய்திகள்
சிபிசிஐடி

குரூப் 4 முறைகேடு- மேலும் ஒரு இடைத்தரகரை கைது செய்தது சிபிசிஐடி

Published On 2020-01-25 06:05 GMT   |   Update On 2020-01-25 07:19 GMT
குரூப் 4 தேர்வு முறைகேட்டில் தொடர்புடைய மேலும் ஒரு இடைத்தரகரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களிடம் இரண்டாவது நாளாக விசாரணை நடைபெற்றது.
கடலூர்:

தமிழகம் முழுவதும் நடந்து முடிந்த குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் பல்வேறு மாவட்டங்களில் தேர்வு எழுதியவர்களை ரகசியமாக போலீசார் கண்காணித்தனர்.

இதுதொடர்பாக கீழக்கரை ராமேஸ்வரம் ஆகிய தேர்வு மையங்களில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் இந்த மையங்களில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக தேர்வு பெற்ற 99 பேர் அதிரடியாக நீக்கப்பட்டனர்.

இந்த மோசடியில் இடைத்தரகர்கள் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கடலூர் சி.பி.சி.ஐ.டி இன்ஸ்பெக்டர் தீபா தலைமையில் போலீசார் உள்ளூர் போலீஸ் படை உதவியுடன் பண்ருட்டி சிறுகிராமம், விருத்தாசலம் ஆகிய பகுதிகளில் அதிரடி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ஏஜெண்டுகளிடம் தொடர்பு உடையவர்களாக கூறப்படும் 2 பேர் பண்ருட்டி சிறுகிராமம், விருத்தாசலம் ஆகிய பகுதிகளில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி போலீசார் அங்கு விரைந்தனர். அவர்களது வீடுகளிலும் அதிரடி ஆய்வு நடத்தினார்கள். அதன் பின்னர் சி.பி.சி.ஐ.டி போலீசார் 2 பேரை மடக்கி பிடித்தனர்.



சென்னையில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் பண்ருட்டி சிறுகிராமத்தை சேர்ந்த இடைத்தரகர் ராஜசேகர் என்பவர் இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். கைதான ராஜசேகர் குரூப்-4 தேர்வில் முதல் 50 இடத்தில் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடந்து வருகிறது. விருத்தாசலத்திலிருந்து அழைத்து வரப்பட்ட மகாலட்சுமியிடம் இது தொடர்பாக போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News