செய்திகள்
கலெக்டர் திவ்யா, போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

ஊட்டியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

Published On 2020-01-21 18:35 GMT   |   Update On 2020-01-21 18:35 GMT
ஊட்டியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
ஊட்டி:

தமிழக அரசின் போக்குவரத்துத்துறை சார்பில், 31-வது சாலை பாதுகாப்பு வாரம் நேற்று முதல் வருகிற 27-ந் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி நீலகிரி மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் ஊட்டியில் நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் ஆகியோர் கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர்.

இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:-

சாலை பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து அனைவரும் தெரிந்துகொள்ளும் பொருட்டு ஆண்டுதோறும் சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வாகன ஓட்டிகள் விபத்து இல்லாமல் வாகனத்தை இயக்குவதே இதன் நோக்கமாகும். இருசக்கர வாகன ஓட்டிகள், பின்னால் அமர்ந்து இருப்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். இரவில் எதிரில் வாகனம் வரும் போது ஒளியை குறைத்து, முன்னால் செல்லும் வாகனங்களுக்கு போதிய இடைவெளி விட்டும், வளைவு, பாலங்கள் உள்ள இடங்களில் கவனமாக செல்ல வேண்டும்.

போக்குவரத்து விதிமுறைகளை மதிப்பதுடன், வாகனம் ஓட்டும் போது செல்போன் பயன்படுத்தக்கூடாது. பேரணியின் நோக்கம் அனைத்து முக்கிய சந்திப்புகள், பஸ் நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சாலை பாதுகாப்பின் முக்கியத்துவத்தை அனைத்து ஓட்டுநர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதே ஆகும். இவ்வாறு அவர் கூறினார். இதில், வட்டார போக்குவரத்து அலுவலர் கதிரவன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் நல்லதம்பி, குலோத்துங்கன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஊர்வலம் ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கி ராஜீவ்காந்தி ரவுண்டானா, லோயர் பஜார், மாரியம்மன் கோவில் சந்திப்பு, கமர்சியல் சாலை, கே‌ஷினோ சந்திப்பு வழியாக சேரிங்கிராஸ் வரை சென்றது. இதில், போலீசார், மகளிர் சுய உதவிகுழுவினர் ஹெல்மெட் அணிந்து சென்றனர். மேலும், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
Tags:    

Similar News