செய்திகள்
சாலையை கடந்து சென்ற புலிகள்

கூடலூர் அருகே சாலையை கடந்து சென்ற புலிகள் - பொதுமக்கள் அச்சம்

Published On 2020-01-20 11:24 GMT   |   Update On 2020-01-20 11:24 GMT
கூடலூர் அருகே சாலையை கடந்து செல்லும் புலியால் பொதுமக்கள் அச்சமடைந்ததையடுத்து வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
கூடலூர்:

நீலகிரி மாவட்டம் கூடலூர்-கோழிக்கோடு சாலையில் மரப்பாலம் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியை சேர்ந்தவர்கள் தினமும் அதிகாலையில் நடைபயிற்சி செல்வது வழக்கம்.

இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த சிலர் வழக்கம் போல் நடைபயிற்சிக்கு சென்றனர். அப்போது அவர்கள் மரப்பாலம் புதிய டிரான்ஸ்பார்மர் அருகே சென்றபோது அங்குள்ள ஒரு தோட்டத்திற்குள் இருந்து 2 புலிகள் வெளியில் வந்தன. இதை பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தோட்டத்தில் இருந்து வெளியில் வந்த புலிகள் அந்த பகுதியில் உள்ள கூடலூர்- கோழிக்கோடு சாலையை கடந்து மறு பகுதிக்கு சென்றது. இதுகுறித்து அந்த நபர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். தொடர்ந்து அந்த பகுதியில் புலி நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘கடந்த சில நாட்களாகவே இந்த பகுதியில் இரவு நேரங்களில் அடிக்கடி புலிகள் சாலையை கடக்கும் சம்பவம் நடந்துள்ளது. இதனை ஏற்கனவே சிலர் பார்த்துள்ளனர்.

இதேபோல் 10-வது மைல் பகுதியிலும் இதே புலிகள் அதிகாலையில் சாலையை கடந்து செல்வதையும் அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். இந்த புலிகள் குண்டம்புழா வனப்பகுதியிலிருந்து வெளியேறி இங்கு வந்து இருக்க வாய்ப்புள்ளது.

எனவே, வனத்துறையினர் தொடர்ந்து புலி நடமாட்டத்தை கண்காணித்து எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News