செய்திகள்
பாஜக தலைவராக சாமிநாதன் எம்எல்ஏ மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

புதுவை மாநில பா.ஜனதா தலைவராக சாமிநாதன் மீண்டும் தேர்வு

Published On 2020-01-16 10:09 GMT   |   Update On 2020-01-16 10:09 GMT
புதுவை மாநில பாஜக தலைவராக சாமிநாதன் எம்.எல்.ஏ. மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இதற்கான அறிவிப்பை மத்திய மந்திரி பிரகலாதசிங் வெளியிட்டார்.

புதுச்சேரி:

புதுவை மாநில பா.ஜனதா தலைவராக சாமிநாதன் எம்.எல்.ஏ. 2015-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார்.

மாநில தலைவர் பதவி காலம் 3 ஆண்டுகள். சாமிநாதன் தலைமையில் புதிய நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களின் பதவிக்காலம் ஓராண்டுக்கு முன்பு நிறைவடைந்தது.

இருப்பினும் கட்சியில் ஓராண்டு தொடர்ந்து மாநில தலைவர், நிர்வாகிகள் பதவியில் நீடித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு பா.ஜனதா நிர்வாகிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு நடந்து வந்தது.

இதில் தொகுதி, மாவட்டத்திற்கான நிர்வாகிகள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. இறுதியாக மாநில தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று நடந்தது. தேர்தலை நடத்த மத்திய மந்திரி பிரகலாதசிங், தமிழக பா.ஜனதா பொதுச் செயலாளர் நரேந்திரன் ஆகியோர் வந்திருந்தனர்.

இந்திராகாந்தி சிலை அருகே உள்ள கட்சி அலுவலகத்தில் புதிய மாநில தலைவர் தேர்வு செய்வதற்கான கூட்டம் நடந்தது. கூட்டத்தின் முடிவில் பா.ஜனதா கட்சியின் மாநில தலைவராக சாமிநாதன் எம்.எல்.ஏ. மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

இதற்கான அறிவிப்பை மத்திய மந்திரி பிரகலாதசிங் வெளியிட்டார். இதையடுத்து கூடியிருந்த கட்சியின் தொண்டர்கள், நிர்வாகிகள் சாமிநாதனுக்கு ஆளுயுர மாலை, சால்வை, துண்டு அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் சங்கர், செல்வ கணபதி, முன்னாள் தலைவர்கள் விஸ்வேஸ்வரன், தாமோதரன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

புதிய மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்ட சாமிநாதன் எம்.எல்.ஏ. கூட்டத்தில் பேசியதாவது:-

கடந்த 4 ஆண்டாக கட்சி நிர்வாகிகளை, தொண்டர்களை ஒருங்கிணைத்து கட்சியை செயல்படுத்தி வந்தேன். காங்கிரஸ் கட்சியினர் புதுவையில் பா.ஜனதாவினர் எங்கே? என கேட்டனர். தற்போது 30 தொகுதியிலும் பா.ஜனதா கொடி பறக்கிறது.

தொடர்ந்து கட்சி நிர்வாகிகளை ஒருங்கிணைத்து செயல்பட்டு புதுவையில் பா.ஜனதாவை ஆட்சிக்கு கொண்டுவர பாடுபடுவேன். காங்கிரஸ் இல்லாத புதுவையை உருவாக்க தொடர்ந்து செயல்படுவோம். அனைவரும் இதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News