செய்திகள்
விபத்தை ஏற்படுத்திய தனியார் பஸ் டிரைவரை பொதுமக்கள் சூழ்ந்து நின்ற காட்சி

நம்பியூர் அருகே தனியார் பஸ் மோதி தொழிலாளி பலி

Published On 2020-01-11 04:43 GMT   |   Update On 2020-01-11 04:43 GMT
நம்பியூர் அருகே தனியார் பஸ் மோதி தொழிலாளி பலியானார். டிரைவருக்கு தர்மஅடி கொடுத்த பொதுமக்கள் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
நம்பியூர்:

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள புது சூரிபாளையம் என்ற இடத்தில் தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்தியூரில் இருந்து கோவை நோக்கி இந்த பஸ் சென்றது.

புது சூரிபாளையம் பகுதியில் சென்றபோது முன்னால் அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. முன்னால் சென்ற அரசு பஸ்சை முந்தி செல்ல தனியார் பஸ் டிரைவர் கண்ணன் ( வயது25) ஓட்டினார்.

அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த கனநாதன் (55) என்பவர் மீது பஸ் மோதியது. இதில் தலை மற்றும் உடலில் பலத்த அடிபட்ட அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பிறகு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே கனநாதன் பரிதாபமாக இறந்து விட்டார்.

விபத்தில் பலியான கனநாதனின் சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் பரமகுடி ஆகும். புது சூரியபாளையத்தில் உள்ள சிமெண்டு செங்கல் தயாரிக்கும் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் அவர் மீது மோதிய தனியார் பஸ் டிரைவர் கண்ணனை அப்பகுதி மக்கள் சூழ்ந்து பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு நம்பியூர் போலீசார் விரைந்தனர்.

பிறகு பொதுமக்கள் டிரைவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

“இப்படி சில தனியார் பஸ்கள் வேகமாக வந்து உயிர் பலி வாங்குகிறது. இதை தடுக்க வேண்டும். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பொதுமக்கள் ஆவேசமாக கூறினார்கள்.

விபத்தில் பலியான தொழிலாளி கனநாதனுக்கு தேன்மொழி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.




Tags:    

Similar News