செய்திகள்
பொங்கல் பரிசு

ஈரோடு மாவட்டத்தில் பொங்கல் பரிசு நாளை முதல் வழங்கப்படும்

Published On 2020-01-08 09:54 GMT   |   Update On 2020-01-08 09:54 GMT
பொங்கல் பரிசு நாளை வியாழக்கிழமை முதல் வழங்கப்பட உள்ளது. பொங்கல் பொருட்கள் அனைத்து ரேசன் கடைகளுக்கும் அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது
சூரம்பட்டி:

பொங்கல் பண்டிகையொட்டி ஒவ்வொரு வருடமும் ரேசன் கடைகளில் அரிசி கார்டுகளுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இது போல இந்த ஆண்டும் பொங்கல் பரிசு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

இதைத்தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் பரிசு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு பொங்கல் பரிசு வழங்கப்பட்டதை விட இந்த ஆண்டு அதை மேலும் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி சர்க்கரை கார்டு வைத்திருப்பவர்கள் அரிசி கார்டுகளாக மாற்றிக்கொள்ளலாம் என்றும் அவர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்றும் தமிழக அரசு கூறி உள்ளது.

இதன்படி ஈரோடு மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரம் சர்க்கரை கார்டுகள் அரிசி கார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன. இவர்களுக்கும் இந்த ஆண்டு பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது.

இதன்படி ஈரோடு மாவட்டத்தில் இந்த ஆண்டு சுமார் 6 லட்சத்து 74 ஆயிரம் ரேசன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு கார்டுகளுக்கும் தலா ரூ. 1000 மற்றும் பச்சரிசி வெல்லம் ஏலக்காய் முந்திரி, பாசிப்பருப்பு போன்ற பொருட்களும் வழங்கப்பட உள்ளன.

இந்த பொங்கல் பரிசு கடந்த மாதம் 20-ந்தேதியே வழங்கப்படுவதாக இருந்தது. உள்ளாட்சி தேர்தல் நடந்ததால் பொங்கல் பரிசு வழங்குவது தள்ளி வைக்கப்பட்டு நாளை வியாழக்கிழமை முதல் வழங்கப்பட உள்ளது.

பொங்கல் பொருட்கள் அனைத்து ரேசன் கடைகளுக்கும் அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதேபோல் இலவச வேட்டி சேலைகளும் ரேசன் கடைகளில் நாளை முதல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

பொங்கல் பரிசாக பொதுமக்களுக்கு வழங்கப்படும் ஆயிரம் ரூபாய்க்கு இரண்டு 500 ரூபாய் நோட்டுகளாக கொடுக்கப்படும்.

பொங்கல் பரிசு வழங்கப்படும்போது ரேசன் கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க ஒவ்வொரு ரேசன் கடைகளிலும் வீதி வாரியாக எந்தெந்த ரேசன் கார்டுகளுக்கு எந்த தேதியில் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று ரேசன் கடைகளில் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்படும். இதை தெரிந்து பொதுமக்கள் அனைவரும் தங்களுக்கு உரிய பொங்கல் பரிசுகளை வாங்கிக் கொள்ளலாம். அரிசி கார்டுகள் வைத்துள்ள அனைவருக்கும் இந்த பொங்கல் பரிசு கிடைக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News