செய்திகள்
கொள்ளை

பண்ருட்டியில் நள்ளிரவில் உளுந்து மண்டி குடோனில் ரூ.5 லட்சம் கொள்ளை

Published On 2020-01-04 07:10 GMT   |   Update On 2020-01-04 07:10 GMT
பண்ருட்டியில் நள்ளிரவில் உளுந்து மண்டி குடோனில் ரூ.5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி காந்தி ரோடு பெரியபள்ளிவாசல் அருகே பாக்கு குடோன், உளுந்து குடோன் நடத்தி வருபவர்கள் சிகாபுதீன் (வயது 56), சிராஜுதீன் (56) இவர்கள் 2 பேரும் தொழிலதிபர்கள்.

பாக்கு குடோன், உளுந்து குடோனில் 50-க்கும் மேற்பட்டோர்வேலை பார்த்து வருகிறார்கள்.

நேற்று இரவு 10 மணியளவில் வேலை முடிந்ததும் ஊழியர்கள் கதவுகளை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்கள். நள்ளிரவில் அங்கு வந்த மர்ம மனிதர்கள் குடோனின்களில் உள்ள இரும்பு கதவுகளை உடைத்து உள்ளே புகுந்தனர்.

பின்பு அவர்கள் அங்கிருந்த பெரிய லாக்கரை உடைக்க முயன்றனர். அதை உடைக்க முடியவில்லை. அதை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்த பீரோ மற்றும் மேஜை டிராயர்களை உடைத்தனர்.

பின் அதில் இருந்த ரூ.5 லட்சம் பணத்தை கொள்ளையடித்து விட்டு சென்று விட்டனர். இன்று காலை குடோனுக்கு ஊழியர்கள் வந்தனர். அப்போது இரும்பு கேட் கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் இது குறித்து குடோன் உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சிகாபுதீன் , சிராஜுதீன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்பு அவர்கள் குடோனுக்குள் சென்று பார்த்தபோது அங்கு பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளை போய் இருந்தது தெரிவந்தது.

இரும்பு லாக்கரை கொள்ளையர்களால் உடைக்க முடியாததால் அதில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள பணம் தப்பியது.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து பண்ருட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் ஜவ்வாது உசேன் ஆகியோர் சம்பவ இடம் விரைந்து சென்று கொள்ளை நடந்த குடோனை பார்வையிட்டனர்.

இதற்கிடையே பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜனும் சம்பவ இடம் சென்று விசாரணை மேற்கொண்டார். இந்த கொள்ளையில் துப்பு துலக்க கடலூரில் இருந்து போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது.

அது கொள்ளை நடந்த குடோனில் மோப்பம் பிடித்து விட்டு வெளியே ஓடி நின்றது. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு. கைரேகைகளை பதிவுசெய்தனர்.

உளுந்து மண்டி குடோனில் பணம் கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடிவரு கின்றனர்.

பண்ருட்டியில் நள்ளிரவில் நடந்த இந்த கொள்ளைசம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News