செய்திகள்
சிவகங்கை மாவட்டம்

சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவர் பதவி 2 பேருக்கு வெற்றி சான்றிதழ் வழங்கிய தேர்தல் அதிகாரிகள்

Published On 2020-01-03 11:29 IST   |   Update On 2020-01-03 14:43:00 IST
தமிழகத்தில் 2 கட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இதில் பல இடங்களில் குளறுபடிகள் நடந்துள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு பஞ்சாயத்தில் 2 பெண்களுக்கு தலைவர் பதவிக்கான வெற்றிச் சான்றிதழ் வழங்கி உள்ளனர் தேர்தல் அதிகாரிகள்.

காரைக்குடி:

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள சங்கராபுரம் யூனியனுக்குட்பட்டது சங்கராபுரம் பஞ்சாயத்து. சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களை கொண்ட இங்கு தலைவர் பதவிக்கு, 2 முறை தலைவராக இருந்த மாங்குடியின் மனைவி தேவி போட்டியிட்டார்.

அவரை எதிர்த்து தொழில் அதிபர் அய்யப்பன் மனைவி பிரியதர்சினி களம் இறங்கினார். இவர்கள் 2 பேருக்கும் இடையே ஆரம்பத்தில் இருந்தே கடும் போட்டி நிலவியது.

காங்கிரஸ் கட்சியில் மாங்குடி, சிவகங்கை மாவட்ட துணைத்தலைவர் பொறுப்பில் இருப்பதால் அவரது மனைவி தேவிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தமிழக பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், மேலிட பார்வையாளர் சஞ்சய்தத், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித்தலைவர் கே.ஆர்.ராமசாமி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் பலரும் பிரசாரம் செய்தனர்.

நேற்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பே, 2 தரப்பினரும் வரிந்து கட்டி நின்றதால் பரபரப்பாக காணப்பட்டது. முன்னணி நிலவரம் அடிக்கடி மாறிக் கொண்டே இருந்தது.

இந்த நிலையில் இரவு 10 மணிக்கு தேவி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு வெற்றிச்சான்றிதழும் வழங்கப்பட்டது.

அவரது ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட போது எதிர்தரப்பினர் வாக்குவாதம் செய்தனர். இது மோதல் ஏற்படுத்தும் சூழலை உருவாக்கியதால் பதட்டம் ஏற்பட்டது.

காரைக்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு அருண், இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். பிரியதர்சினி தரப்பினர் மறு வாக்கு எண்ணிக்கை வேண்டும் என்றனர்.

இன்று அதிகாலை 2 மணி வரை பேச்சுவார்த்தை நீடித்தது. அதன் பிறகு ஏற்கனவே வெற்றிச் சான்றிதழ் பெற்று விட்ட தேவி தரப்பினர் அங்கிருந்து சென்று விட்டனர்.

ஆனால் எதிர்தரப்பு அங்கேயே அமர்ந்திருந்தது. சில மணி நேரங்களுக்கு பிறகு மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால் தேவி தரப்பினர் வாக்கு எண்ணும் மையத்திற்கு வாருங்கள் என அறிவிக்கப்பட்டது. ஆனால் யாரும் வரவில்லை.

மாவட்ட தேர்தல் பார்வையாளர் கருணாகரன், தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான ஜெயகாந்தன் அங்கு வந்தனர். காலை 5 மணிக்கு 63 வாக்குகள் வித்தியாசத்தில் பிரிய தர்சினி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதனால் சங்கராபுரம் பஞ்சாயத்தில் பதட்டம் ஏற்பட்டது. 2 பெண்களுக்கு மாறி, மாறி வெற்றிச்சான்றிதழ் வழங்கப்பட்டது மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியது.

Similar News