செய்திகள்
கோப்பு படம்

வேலூர் மார்க்கெட்டில் போலி டீ தூள் பறிமுதல் - அதிகாரிகள் கடும் எச்சரிக்கை

Published On 2019-12-28 16:50 IST   |   Update On 2019-12-28 16:50:00 IST
வேலூர் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் போலி டீ தூளை பறிமுதல் செயதனர்.
வேலூர்:

வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் உள்ள சில கடைகளில் போலி டீ தூள் விற்பனை செய்யப்படுவதாக வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரத்துக்கு புகார்கள் சென்றன.

இது தொடர்பாக ஆய்வு நடத்தி உடனடி நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

அதன்படி, உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் சுரேஷ் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சுரேஷ், நாகேஸ்வரன், ரவிந்திரநாத், ராஜேஷ், பழனிசாமி ஆகியோர் அடங்கிய குழுவினர், வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் உள்ள 15-க்கும் அதிகமான கடைகளில் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த ஆய்வில் அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 50 கிலோ, குட்கா ½ கிலோ மற்றும் தலா ½ கிலோ எடைகொண்ட போலி டீ தூள் 300 பாக்கெட்டுகள், எச்சரிக்கை விளம்பரம் இல்லாத 70 சிகரெட் பாக்கெட்டுகள், 2 மளிகை பொருட்களில் கலப்படம் ஆகியவை கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்ந்து டீ தூள் பாக்கெட்டுகளில் 2 விதமான மாதிரிகளையும், மளிகை பொருட்களில் 2 விதமான மாதிரிகளையும் சேகரித்து சேலம் பரிசோதனை மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தொடர்ந்து இதுபோன்று பொதுமக்கள் நலனில் பங்கம் விளைவிக்கும் வகையில் கலப்பட பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு முதல் முறை என்பதால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும், 2-வது முறை என்றால் 10 ஆயிரம், 3-வது முறை என்றால் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவர் என்று உணவு பாதுகாப்புதுறை நியமன அலுவலர் டாக்டர் சுரேஷ் தெரிவித்தார்.

Similar News