செய்திகள்
யானை கூட்டம்

ஆம்பூர் அருகே 3-வது நாளாக விவாசாய நிலத்திற்குள் புகுந்து யானை கூட்டம்

Published On 2019-12-25 19:42 IST   |   Update On 2019-12-25 19:42:00 IST
ஆம்பூர் அருகே 3-வது நாளாக விவாசாய நிலத்திற்குள் புகுந்து யானைகள் பயிர்களை நாசம் செய்தன.

ஆம்பூர்:

ஆம்பூர் அடுத்த உமராபாத் அருகில் உள்ள மாச்சம்பட்டு, கெனத்தூர், பாலூர், உள்ளிட்ட கிராமங்களுக்குள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 7 காட்டு யானைகள் புகுந்தன. அங்கு விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு, தென்னை, வாழை, தக்காளி, பூந்தோட்டங்களை சூறையாடியும், மிதித்தும் நாசம் செய்தன.

தொடர்ந்து யானை கூட்டம் அந்த பகுதியிலேயே முகாமிட்டுள்ளன. நேற்று அதிகாலை சின்னவரிகம் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் யானைகள் புகுந்தன. அங்குள்ள தென்னை, வாழை மரங்களை சாய்த்து அட்டகாசம் செய்தன.

மேலும் நெற்பயிர்கள், பூச்செடிகளை மிதித்து நாசம் செய்துள்ளன. யானைகள் அங்கும் இங்குமாக சுற்றி திரிந்ததில் விவசாய பயிர்கள் சேதமடைந்துள்ளது.

15 விவசாயிகளுக்கு சொந்தமான 40 ஏக்கர் நெல், காய்கறி, பூச்செடிகள் நாசம் செய்துள்ளன.

வனப்பகுதியில் முகாமிட்டிருந்த யானை கூட்டம் நேற்று இரவு மிட்டாளம் அருகே உள்ள பைரப்பள்ளி கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் புகுந்தன. அங்குள்ள மாந்தோப்பில் மரக்கிளைகளை முறித்து வீசின. மேலும் மாலை வாழை தோட்டத்திற்கு புகுந்து அட்டகாசம் செய்தன.

நேற்று இரவு யானைகள் அட்டகாசத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பயிர்கள் வீணாகியுள்ளது. தொடர்ந்து யானைகள் அங்கேயே முகாமிட்டுள்ளன.

கிராமங்களில் முகாமிட்டுள்ள யானைகள் கூட்டத்தை காட்டு பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

மார்கழி மாதத்தில் ஆந்திரா எல்லையோரம் உள்ள கிராமங்களில் நெல் உள்ளிட்ட பயிர்களை நடவு செய்கின்றனர்.

இதனால் ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் யானைகள் வருவது வழக்கமாகி விட்டது.

கடந்த ஆண்டு மார்கழி மாதம் குடியாத்தம் அருகே கொட்டமிட்டா பகுதிக்கு ஆந்திர மாநிலம் கவுண்டண்யா சரணாலயத்தில் உள்ள யானைகள் கூட்டமாக வருகின்றன. இந்த மாத தொடக்கத்தில் 11 காட்டு யானைகள் கொட்டமிட்டா விளை நிலங்களுக்குள் புகுந்து வாழை மா மரங்களை சேதபடுத்தின.

வனத்துறையினர் யானைகளை விரட்டியடித்தனர். இந்த ஆண்டும் மார்கழி மாத தொடக்கத்திலேயே யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

Similar News