செய்திகள்
பொங்கல் பரிசு

வேலூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு அடுத்த வாரம் வழங்க வாய்ப்பு

Published On 2019-12-23 10:23 GMT   |   Update On 2019-12-23 10:23 GMT
வேலூர் மாவட்டத்தில் அடுத்த வார இறுதியில் அல்லது ஜனவரி மாதம் முதல் வாரத்தில் இருந்து பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்படும் என்று அதிகாரி தெரிவித்துள்ளார்.
வேலூர்:

தமிழக மக்கள் பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாட ஏதுவாக பச்சரிசி 1 கிலோ, சர்க்கரை 1 கிலோ, இரண்டடி நீள கரும்புத்துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை மற்றும் 5 கிராம் ஏலக்காய் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கப்பணம் ஆகியவை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என்று ஏற்கனவே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

இதையொட்டி கடந்த நவம்பர் 26-ந் தேதி இந்த திட்டத்தை கோட்டையில் அவர் தொடங்கி வைத்தார்.

அதன்பிறகு உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், பொங்கல் பரிசு உடனே கிடைக்குமா? கிடைக்காதா என்ற எதிர்பார்ப்பில் பலர் இருந்தனர்.

இதையொட்டி தமிழக அரசு கடந்த 20-ந் தேதி பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க ஏற்பாடு செய்து வருவதாக தகவல் வெளியானது.

இதுபற்றி மதுரை, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

“தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள 27 மாவட்டங்களை தவிர்த்து மற்ற 10 மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்க தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது” என கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து தேர்தல் நடைபெறாத சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பொங்கல் பரிசு தொகுப்பை ரேசன் கடைகள் மூலம் வழங்க அரசு ஏற்பாடு செய்து வருகிறது.

எந்த தேதியில் இருந்து பொங்கல் பரிசு வழங்கப்படும் என்பது பற்றி அறிவிப்பு இன்னும் வரவில்லை.

இதற்காக ஒவ்வொரு பொருட்களை பாக்கெட் போட்டு தயார் நிலையில் வைத்திருக்கும்படியும், ரொக்கப்பணம் ரூ.1000 வழங்குவதற்கான மத்திய கூட்டுறவு வங்கியில் இருந்து பணத்தை பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்யும்படியும் உணவு கூட்டுறவு துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

தினமும் 150 முதல் 200 ரேசன் கார்டுதாரர்களுக்கு வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யும்படியும், எந்தெந்த தேதியில் எந்தெந்த தெருக்களுக்கு பொருட்கள் வழங்கப்படும் என்ற பட்டியலை ரேசன் கடைகளில் எழுதி ஒட்ட வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு பாக்கெட் போட வேண்டும். இன்னும் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு வராததால் பரிசு தொகுப்பு தயாராகவில்லை.

மேலும் ரூ.1000 பணம் வரவில்லை பொருட்கள், பணம் வந்ததும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் அடுத்த வார இறுதியில் அல்லது ஜனவரி மாதம் முதல் வாரத்தில் இருந்து பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்படும் என்றார்.

Tags:    

Similar News