விராலிமலை அருகே இளம்பெண் எரித்துக்கொலை- கற்பழிக்கப்பட்டாரா? என போலீசார் விசாரணை
விராலிமலை:
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே மேலபச்சைக்குடி திருச்சி- மதுரை நான்கு வழிச்சாலையோரம் வயல் பகுதி உள்ளது. இன்று காலை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வேலைக்காக அங்கு சென்றனர்.
அப்போது வயல் பகுதியில் இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இது குறித்து உடனடியாக விராலிமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே இலுப்பூர் டி.எஸ்.பி. சிகாமணி, விராலிமலை இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு 32 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் இறந்து கிடந்ததுடன், அவரது உடல் பாதி எரிந்த நிலையில் இருந்தது. இதையடுத்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்து கிடந்த இளம்பெண் பெயர், ஊர் விவரம் தெரியவில்லை. எப்படி இறந்தார் என்றும் தெரியவில்லை. உடல் பாதி எரிந்த நிலையில் உள்ளதால் மர்ம நபர்கள் யாராவது அவரை வயல் பகுதிக்கு கடத்தி வந்து கற்பழித்து, எரித்து கொன்றார்களா? அல்லது குடும்ப பிரச்சினையில் அந்த இளம்பெண் வயல் பகுதிக்கு வந்து தீக்குளித்து தற்கொலை செய்தாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் மாயமான இளம்பெண்களின் விவரத்தை வைத்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரேத பரிசோதனை முடிவில் இளம்பெண் சாவுக்கான காரணம் குறித்து முழு விவரம் தெரியவரும். வயல் பகுதியில் தீயில் கருகிய நிலையில் இளம்பெண் இறந்து கிடந்த சம்பவம் விராலிமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.