செய்திகள்
அலமேலு வனப்பகுதியில் பொருத்தப்பட்ட கேமிரா.

சிங்கப்பெருமாள்கோவில் அருகே சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க கேமிரா- வனத்துறையினர் நடவடிக்கை

Published On 2019-12-12 11:16 GMT   |   Update On 2019-12-12 11:16 GMT
சிங்கப்பெருமாள்கோவில் அருகே வனப்பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க கேமிரா பொருத்தப்பட்டு அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள்கோவில் அருகே செங்குன்றம், அலமேலு மங்காபுரம் கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு இடையே உள்ள வனப்பகுதியில் 2 நாய்கள் கடித்து குதறப்பட்ட நிலையில் செத்துக்கிடந்தன. அங்கு சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகவும், சிறுத்தை கால் தடம் இருப்பதாகவும் வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, செங்கல்பட்டு வனத்துறை அதிகாரிகள் அங்கு சென்று நாய்கள் செத்துக்கிடந்த இடத்தை பார்வையிட்டனர். செத்த நாய்களை மருத்துவ பரிசோதனைக்காக வனத்துறையினர் அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதாக கூறப்பட்ட வனப்பகுதியில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி பாண்டுரங்கன் கூறியதாவது:-

சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளதாக பொதுமக்கள் அஞ்சும் பகுதிகளில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. நேற்று அதில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தோம்.

இதுவரை அந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதற்கான எந்தவித அறிகுறிகளும் இல்லை. தொடர்ந்து 24 மணி நேரமும் வனத்துறையினர் கண்காணித்து வருகிறார்கள். ரோந்து பணியிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே வந்தது முள்ளம் பன்றி அல்லது காட்டுப்பன்றியாக இருக்கலாம்.

சிறுத்தை நடமாட்டம் இருப்பதற்கான காட்சிகள் எதுவும் பதிவானால் கூண்டு வைத்து பிடிக்க ஏற்பாடு செய்யப்படும். சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக மக்கள் அச்சப்படும் பகுதியில் மின் விளக்குகள் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே பயம் வேண்டாம்.

அந்த பகுதி மக்கள் வீட்டில் உள்ள மாடுகள், நாய்கள் வீட்டில் இருந்து வெளியே வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News