செய்திகள்
சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம்

இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - கார்த்தி சிதம்பரம் எம்.பி. குற்றச்சாட்டு

Published On 2019-12-09 18:16 GMT   |   Update On 2019-12-09 18:16 GMT
இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை:

ஜாமீனில் விடுவிக்கப்பட்ட முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். அங்கிருந்து கார் மூலம் புதுக்கோட்டை வழியாக சொந்த ஊரான சிவகங்கைக்கு சென்றார். அவருக்கு புதுக்கோட்டை கட்டியாவயல் அருகே மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது ப.சிதம்பரத்தோடு வந்திருந்த சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சட்டப்படி தண்டனை பெற்று கொடுக்க வேண்டுமே தவிர போலீசாரோ, அரசாங்கமோ சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு என்கவுண்டர் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.

ஜனநாயக நாட்டில் என்கவுண்டர் என்பது இழுக்கான ஒன்று. என்கவுண்டர் விவகாரத்தில் பல சந்தேகங்கள் எழுகிறது. உண்மையாக இவர்கள் தான் குற்றம் செய்தார்களா என்பதை நீதிமன்றம்தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர என்கவுண்டரை எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறினார். இதேபோல திருமயம் பைரவர் கோவில் முக்கத்தில் ப.சிதம்பரத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. ராமசுப்புராம் தலைமையில் கூட்டணி கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து திருமயம் பைரவர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று, சிதம்பரத்திற்கு பரிவட்டம் கட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அவர் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு, காரில் காரைக்குடிக்கு புறப்பட்டு சென்றார்.
Tags:    

Similar News