அரக்கோணம் பகுதியில் பலத்த மழையால் 7 வீடுகள் இடிந்து விழுந்தன. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை.
அரக்கோணம்:
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. அரக்கோணம் பகுதியில் மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அரக்கோணம் இரட்டை கண் பாலத்தில் மழைநீர் தேங்கியது.
இந்த பாலத்தின் வழியாக தினமும் 4 ஆயிரம் வாகனங்கள் செல்கின்றன. தண்ணீர் தேங்கியதால் பாலத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நகராட்சி ஊழியர்கள் 20 பேர் தண்ணீரை அப்புறப்படுத்தினர். இதனையடுத்து போக்குவரத்து சீரானது. காவேரிப்பாக்கம் பகுதியில் பலத்த மழை பெய்தது. இங்கு அதிகபட்சமாக 32.2 மி.மீ. மழை பெய்தது. அரக்கோணத்தில் 21.2 மில்லி மீட்டர் மழை பதிவானது.
அரக்கோணம் அருகே தொடர்ந்து பெய்து வரும் மழையால் வீடுகள் சேதடைந்துள்ளன. அரக்கோணம் அருகே உள்ள அன்வர்தின்காபேட்டையில் 2 வீடுகள், வளர்புரம் கிராமத்தில் 2 வீடுகள், மூதுர், மின்னல், அரக்கோணம் அம்பேத்கர் நகர் ஆகிய இடங்களில் தலா ஒரு வீடுகள் என மொத்தம் 7 வீடுகள் இடிந்து விழுந்தன. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை.