செய்திகள்
பன்றி காய்ச்சல்

தமிழகத்தில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவுகிறது

Published On 2019-11-25 10:11 GMT   |   Update On 2019-11-25 10:11 GMT
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருவதால் பன்றி காய்ச்சல் சற்று வேகமாக பரவி வருகிறது.
சென்னை:

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில் பருவ நிலை மாறி வருவதன் காரணமாக பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கான புதிய தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்த ஒரு வாரத்திற்குள் அரசு மருத்துவமனைகளுக்கு போதிய அளவில் தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஹெச்1என்1 மற்றும் ஹெச்2என்3 போன்ற பல்வேறு வகையான இன்ப்ளூயன்சா வைரஸ்கள் மூலமாக பன்றி காய்ச்சல் பரவுகிறது.

நாடு முழுவதும் கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பன்றி காய்ச்சலுக்கு பலியானதாக மத்திய சுகாதாரத்துறை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு மட்டும் 1103 பேர் அக்காய்ச்சலில் பாதிக்கப்பட்டு இறந்தனர். தமிழகத்தில் 43 பேர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து அதற்கான தடுப்பூசிகளை வழங்கும் பணிகளும் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. அதன் விளைவாக நடப்பாண்டு தொடக்க முதலே பன்றி காய்ச்சல் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வந்தது.

கடந்த அக்டோபர் மாதம் வரையில் மாநிலத்தில் 542 பேருக்கு மட்டும் பன்றி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்தது. அவர்களில் 99 சதவீதம் பேர் குணமடைந்து விட்டதாகவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருவதால் பன்றி காய்ச்சல் சற்று வேகமாக பரவி வருகிறது.

நவம்பர் 1-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை 164 பேருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

சமீபகாலமாக புதிய வகையான இன்ப்ளூயன்சா வைரஸ்களால் பன்றி காய்ச்சல் ஏற்படுவதால் அதற்குரிய தடுப்பூசிகளை போட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

அந்த வகை தடுப்பூசிகள் தற்போது தரப்பரிசோதனை நிலையில் உள்ளன. விரைவில் அவை கொள்முதல் செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

இந்த ஆண்டு நாடு முழுவதும் பன்றிக்காய்ச்சல் பாதிப்புக்கு 1205 பேர் பலியாகினர். தமிழகத்தை பொறுத்தவரை மற்ற மாநிலங்களை காட்டிலும் இறப்பு விகிதம் வெகுவாக குறைந்துள்ளது. கடந்த 11 மாதங்களில் இங்கு 3 பேர் மட்டுமே சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளனர்.

கடந்தசில வாரங்களாக பன்றி காய்ச்சல் பாதிப்பு விகிதம் அதிகரித்து வருவது குறித்து கண்காணித்து வருகிறோம். முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News