செய்திகள்
மாநில தேர்தல் ஆணையம்

உள்ளாட்சி தேர்தலை 2 கட்டமாக நடத்த திட்டம் - மாநில தேர்தல் ஆணையம் பரிசீலனை

Published On 2019-11-24 21:56 GMT   |   Update On 2019-11-24 21:56 GMT
உள்ளாட்சி தேர்தலை 2 கட்டமாக டிசம்பர், ஜனவரி மாதங்களில் நடத்த மாநில தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது.
சென்னை:

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் 2016-ம் ஆண்டு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை என்று கூறி தி.மு.க. கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால் குறிப்பிட்ட காலத்திற்குள் தேர்தல் நடத்த முடியாமல்போனது. பின்னர், இடஒதுக்கீடு முறைப்படுத்தும் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்றதால், தொடர்ந்து தேர்தல் நடத்த முடியாத நிலையே இருந்தது. இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டு கடிந்துகொண்டதை தொடர்ந்து, கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இந்த பணிகள் நடைபெற்றுவந்தன. சமீபத்தில் மாநில தேர்தல் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் டிசம்பர் 2-ந் தேதி உள்ளாட்சி தேர்தல் தேதியை தெரிவிப்பதாக அறிவித்துள்ளது.

உள்ளாட்சி தேர்தலுக்கான பணியில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கிடையே, மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர், பேரூராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஆகிய பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துவிட்டது.

நகர்ப்புறங்களில் மொத்தம் உள்ள 15 மாநகராட்சிகளில் 1,064 வார்டுகள் உள்ளன. அதேபோல், நகராட்சி வார்டுகள் 3,468-ம், நகர பஞ்சாயத்து வார்டுகள் 8,288-ம் இருக்கின்றன. கிராமப்புறங்களில் 655 மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளும், 6,471 பஞ்சாயத்து யூனியன் வார்டு உறுப்பினர் பதவிகளும், 12,524 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிகளும், 99,324 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளும் உள்ளன.

எனவே, கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களுக்கு தனித்தனியாக உள்ளாட்சி தேர்தலை நடத்தலாமா? என்று மாநில தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது.

2 கட்ட தேர்தல் தொடர்பாக அதிகாரிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் ஆர்.பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். டிசம்பர் மாத இறுதியில் பஞ்சாயத்துகளுக்கான தேர்தலையும், ஜனவரி மாத தொடக்கத்தில் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கான தேர்தலையும் நடத்த பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தெரிகிறது. 
Tags:    

Similar News