செய்திகள்
ரேசன் கார்டு

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஆதார், ரேசன் கார்டுகளை வீசி பொதுமக்கள் போராட்டம்

Published On 2019-11-22 15:05 GMT   |   Update On 2019-11-22 15:05 GMT
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வார்டு மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆதார், ரேசன் கார்டுகளை வீசியெறிந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர்:

வேலூர் மாநகராட்சி 58-வது வார்டு அரியூர் விசுவநாதன் நகர் தற்போது வார்டு மறுவரையறை செய்யப்பட்டு 59-வது வார்டில் சேர்க்கப்பட்டுள்ளது.

இதனால் இந்த பகுதி மக்கள் வாக்களிக்க சித்தேரிக்கு செல்ல வேண்டியிருக்கும். அப்பகுதி பொதுமக்கள் மீண்டும் 58-வது வார்டில் சேர்க்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

மேலும் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆனால் இந்த பகுதி 59 வார்டிலேயே சேர்க்கப்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் 40க்கும் மேற்பட்டோர் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் ஆதார் அட்டை, ரேசன் கார்டு மற்றும் டிரைவிங் லைசன்ஸ் உள்ளிட்டவற்றை தரையில் வீசினர்.

மேலும் தரையில் அமர்ந்து பதாகைகளை ஏந்தியபடி கோ‌ஷம் எழுப்பினர்.

கலெக்டர் அலுவலக பொது மேலாளர் முரளி, தாசில்தார் பாலாஜி ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறியதாவது:-

அரியூர் ஊராட்சியில் இருந்தபோது நாங்கள் எங்கள் பகுதியில் வாக்களித்து வந்தோம் மாநகராட்சியில் சேர்க்கப் பட்ட பின்னர் 58-வது வார்டில் இணைத்தார்கள்.

தற்போது வார்டு மறுவரையரை செய்யப்பட் டதால் 59 வார்டில் சேர்த்துள்ளனர். இதனால் வாக்களிக்க சித்தேரி செல்ல வேண்டியுள்ளது.

இது எங்களுடைய உரிமையை பறிப்பதாக உள்ளது என்றனர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.

பொதுமக்கள் போராட்டத்தை அறிந்த சத்துவாச்சாரி போலீசார் விரைந்து வந்து அவர்களை வேனில் ஏற்றி அப்புறப்படுத்தினர்.

இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News