செய்திகள்
அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

புலிகுளம்-காங்கேயம் காளைகளை பாதுகாக்க வேண்டும்: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேச்சு

Published On 2019-11-22 11:47 GMT   |   Update On 2019-11-22 11:47 GMT
புலிகுளம் மற்றும் காங்கேயம் காளைகளை பாதுகாக்க வேண்டும் என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார்.

மானாமதுரை:

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே தாயமங்கலம் ரோட்டில் அமைந்துள்ள புலிகுளம் மாட்டின ஆராய்ச்சி மையத்தை தமிழக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பதிவாளர் பாலச்சந்திரன் முன்னிலை வகித்தார். ஆராய்ச்சி மையத்தை திறந்து வைத்த அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

புலிகுளம் மாடு என்பது தமிழகத்தில் இருக்கின்ற உள்ளூர் நாட்டினங்களில் பிரசித்தி பெற்றவை. அதே போல் காங்கேயம் காளை நாட்டினமும் சிறப்பு வாய்ந்தது. இவைகளை பாதுகாக்க வேண்டும்.

இந்த ஆராய்ச்சி மையம் மூலமாக புலிகுளம் காளைகள், பசுக்களை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு குறைந்த விலையில் கொடுப்பதே இதன் நோக்கமாகும்.

புலிகுளம் காளைகள் தான் மற்ற காளைகளை விட சிறந்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறி உள்ளனர்.

தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரமாக இருக்கும் கால்நடை வளர்ப்பை ஊக்குவிப்பதற்கு அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. அழிந்து வரும் மாட்டினங்களை காப்பதற்கு முதல்- அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இந்த மையத்துக்கு ரூ.2 கோடியில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு 40 பசுக்களும், 5 காளை மாடுகளும் இங்கு உள்ளன. புலிகுளம் மாடுகளின் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் குறைவாக உள்ளன.

இவைகளை அதிகளவில் உற்பத்தி செய்து அவற்றை விவசாயிகளிடம் கொடுத்து அதனுடைய எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

புலிகுளம் காளைகள் ஜல்லிக்கட்டுக்கும், மஞ்சு விரட்டுக்கு பெயர் போன காளைகளாக இருப்பதால் தமிழ்நாடு முழுவதும் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் வகையில் தரமானதாக உற்பத்தி செய்ய வேண்டும். நமது அடையாளத்தை மீட்டு எடுக்கும் முயற்சியை எடுத்து வருகிறோம்.

அந்த வகையில் குறைந்து வரும் புலிகுளம் மாட்டினை அதிகரிக்க இந்த ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் பாஸ்கரன், நாகராஜன் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விழாவுக்கான ஏற்பாடுகளை செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி பாண்டி செய்திருந்தார்.

Tags:    

Similar News