செய்திகள்
கோப்பு படம்

திருப்பத்தூர் அருகே சுகாதாரமற்ற கழிவறை - அரசு பெண்கள் பள்ளியில் போராட்டம் அறிவிப்பால் போலீஸ் பாதுகாப்பு

Published On 2019-10-30 11:56 GMT   |   Update On 2019-10-30 11:56 GMT
திருப்பத்தூர் அருகே அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுகாதாரமற்ற கழிவறை இருப்பதை கண்டித்து போராட்டம் அறிவித்ததால் பள்ளிக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
திருப்பத்தூர்:

திருப்பத்தூர் அருகே உள்ள மடவாளம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 800க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியில் உள்ள கழிவறைக்கு போதுமான தண்ணீர் வசதி இல்லை. கழிவறைக்கு செல்லும் மாணவிகள் தொற்று வியாதிகளால் அவதியடைந்து வருகின்றனர்.

இதனால் கழிவறை பயன்படுத்த முடியாதநிலையில் உள்ளது.

பள்ளி கழிவறையை சுகாதாரமாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கல்வி அதிகாரிகளுக்கு மாணவிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனை கண்டித்து இன்று காலை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.

இதனால் பள்ளியில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மழை காரணமாக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் மாணவிகள் காலை பள்ளிக்கு வரவில்லை .

ஆனால் அறிவித்தபடி விடுதலை சிறுத்தைகள்கட்சி மாவட்ட செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் கட்சியினர் பள்ளி முன்பு திரண்டனர்.

திருப்பத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் மணிமேகலை மற்றும் போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News