செய்திகள்
பலியான பள்ளி மாணவன்

மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பலி - உறவினர்கள் போராட்டத்தால் பரபரப்பு

Published On 2019-10-19 16:40 GMT   |   Update On 2019-10-19 16:40 GMT
வங்கியின் பெயர் பலகையை தொட்டபோது மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பலியானான். உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குறிஞ்சிப்பாடி:

குள்ளஞ்சாவடி கருமாச்சிபாளையத்தை சேர்ந்தவர் ராமதாஸ். இவருடைய மகன் தினேஷ்குமார்(வயது 14). இவன், குள்ளஞ்சாவடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். உடல்நலக்குறைவால் பாதிக் கப்பட்ட தினேஷ்குமார் அம்பலவாணன்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று, சிகிச்சை பெற்றான். பின்னர் வீட்டிற்கு செல்வதற்காக குள்ளஞ்சாவடியில் நடந்து சென்றான். அப்போது ஒரு வங்கியின் முன்பு வைத்திருந்த வங்கியின் மின்சார பெயர் பலகையை தினேஷ்குமார் தொட்டான். அப்போது திடீரென மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட அவன், மயங்கி விழுந்தான். அவனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே தினேஷ்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவனது உடல், பிரேத பரிசோதனைக்காக பிணவறையில் வைக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் தினேஷ்குமாரின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் குள்ளஞ்சாவடியில் உள்ள வங்கி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் பற்றி தகவல் அறிந்ததும் நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன், குறிஞ்சிப்பாடி தாசில்தார் கீதா ஆகியோர் விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உறவினர்கள் கூறுகையில், தினேஷ்குமாரின் உயிர் இழப்புக்கு காரணமான வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தினேஷ்குமாரின் குடும்பத்திற்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றனர். அதற்கு தாசில்தார் கீதா, உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதை யடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, பரபரப்பும் ஏற்பட்டது. 
Tags:    

Similar News