செய்திகள்
டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணியில் கலந்து கொண்ட கலெக்டர் கதிரவன்

டெங்கு கொசு ஒழிப்பு பணி- 2 நிறுவனங்களுக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம்

Published On 2019-10-18 11:34 GMT   |   Update On 2019-10-18 11:34 GMT
ஈரோட்டில் கலெக்டர் கதிரவன் நடத்திய ஆய்வில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் இருந்த 2 நிறுவனங்களுக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கையாக மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமையில் அதிகாரிகள் ஒவ்வொரு பகுதியாக வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்து வருகிறார்கள். டெங்கு கொசு உற்பத்தி செய்யும் சூழ்நிலை கண்டறியப்படும் வீடுகள் நிறுவனங்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்.

இன்று மூன்றாவது நாளாகவும் டெங்கு தடுப்பு நடவடிக்கை ஆய்வு தொடர்ந்தது. இன்று காலை ஈரோடு காலிங்கராயன் இல்லத்தில் டெங்கு ஒழிப்பு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடந்தது.

கலெக்டர் கதிரவன் பேரணிக்கு தலைமை தாங்கினார். ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கணேசன் முன்னிலை வகித்தார். ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பாலச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். பின்னர் கலெக்டர் போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் கண்காணிப்பாளர் மற்றும் அதிகாரிகள் சைக்கிளில் பேரணியாக சென்று டெங்கு குறித்த ஆய்வில் ஈடுபட்டனர்.

ஈரோடு மண்டலம் 2-க்கு உட்பட்ட நடேசன் மில் காம்பவுண்ட் சின்னமுத்து வீதி பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு செயல்பட்டு வந்த ஒரு மைக்ரோ பயாலஜி ஆய்வகத்தை அவர்கள் ஆய்வு செய்தனர். அப்போது இந்த ஆய்வகம் சுகாதாரமற்ற முறையில் இருந்ததால் அந்த ஆய்வகத்துக்கு ரூ.1லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் ஒவ்வொரு வீடாகச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். வீட்டு மாடியில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் ஆய்வு மேற்கொண்டனர். அதே பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டபோது அந்த உணவகத்தில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் சூழ்நிலை கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த உணவகத்துக்கும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அந்த உணவகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

மேலும் கொசு புழுக்கள் உருவாகும் வகையில் சூழல் ஏற்படும் கடைகள் வீடுகள் கண்டறியப்பட்டால் உடனடியாக அபராதம் விதிக்க கலெக்டர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கலெக்டர் கேட்டுக்கொண்டார்.
Tags:    

Similar News