செய்திகள்
கல்குவாரிக்கு செல்லும் வழியை பொதுமக்கள் செல்ல தடைசெய்யப்பட்டு அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டுள்ளதை காணலாம்.

அம்மாப்பேட்டை அருகே வெடி விபத்தில் 2 பேர் பலி

Published On 2019-10-17 10:46 GMT   |   Update On 2019-10-17 10:46 GMT
அம்மாப்பேட்டை அருகே கல்குவாரி வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் பலியான வழக்கில் உரிமையாளர்கள் 2 பேர் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
அம்மாப்பேட்டை:

ஈரோடு மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே ஊமாரெட்டியூரை அடுத்துள்ள அந்தோனிபுரத்தில் வேலா புளூ மெட்டல்ஸ் என்ற பெயரில் தனியாருக்கு சொந்தமாக கல் குவாரி இயங்கி வருகிறது.

அங்கு நேற்று மதியம் சுமார் 3 மணியளவில் நெரிஞ்சிப்பேட்டை கரட்டுகொட்டாயை சேர்ந்த செந்தில்(40), சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே ஜேடர்பட்டி ஆருளி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் (38), நெரிஞ்சிப்பேட்டை கோயில் கரட்டை சேர்ந்த சுப்பிரமணி ஆகியோர் கல்குவாரியில் துளை போட்டு வெடிமருந்து வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக வெடி வெடித்ததில் பாறை சரிந்து செந்திலும், ஆறுமுகமும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். சுப்பிரமணி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இச்சம்பவத்தை கோபி ஆர்.டி.ஓ. ஜெயராமன், பவானி போலீஸ் துணை சூப்பிரண்டு சேகர், அந்தியூர் தாசில்தார் மாலதி, அம்மாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமாரவேல் நிலவருவாய் அதிகாரி சாந்தி உள்பட அதிகாரிகள் நேரில் சென்று வெடி விபத்திற்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்தனர்.

தற்போது வெடி விபத்து நடந்த பகுதிக்கு பொது மக்கள் யாரும் போகாதவாறு தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த விபத்து குறித்து அம்மாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து கல்குவாரியில் முறையாக வெடிமருந்து பயிற்சி பெற்ற நபர்களை வைத்து கையாள தவறியது எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல் அஜாக்கிரதையாக செயல்பட்டது உட்பட 3 பிரிவுகளில் உரிமையாளர்கள் பூபதி, முத்துநாதன், மானேஜர் பழனிசாமி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து தேடிவருகின்றனர்.

Tags:    

Similar News