செய்திகள்
கொள்ளை

ஈரோட்டில் லாரி உரிமையாளர் வீட்டில் 16 பவுன் நகை கொள்ளை

Published On 2019-10-17 10:16 GMT   |   Update On 2019-10-17 10:16 GMT
ஈரோட்டில் லாரி உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:

ஈரோடு முள்ளம்பரப்பு முறை நகரைச் சேர்ந்தவர் சுமதி. இவரது கணவர் இருசப்பன் (வயது39). சொந்தமாக டாரஸ் லாரி வைத்துள்ளார்.

இவர் குடும்பத்துடன் ஈரோடு பூந்துறை அடுத்த முல்லை நகரில் குடியிருந்து வருகிறார். இந்நிலையில் இருசப்பன் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலை வி‌ஷயமாக கொல்கத்தா சென்று விட்டார். சுமதி மட்டும் வீட்டில் இருந்துள்ளார். நேற்று காலை சுமதி ஈரோடு கிருஷ்ணா தியேட்டர் அருகே உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்நிலையில் நேற்று மாலை சுமதிக்கு ஒரு போன் வந்தது. அதில்பேசிய பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள் உங்கள் வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சுமதி வீட்டுக்கு வேகமாக வந்து பார்த்தார்.

அப்போது வீட்டின் பூட்டு கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தார். வீட்டில் பொருட்கள் சிதறிக்கிடந்தன. பீரோ திறந்து கிடந்தன. பீரோவில் வைத்திருந்த 16 பவுன் நகையும், 60 ஆயிரம் பணம் மாயமாகி இருந்தது. மர்ம ஆசாமிகள் யாரோ வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு கைவரிசை காட்டியது தெரியவந்தது.

இதுகுறித்து தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொள்ளை நடந்த வீட்டின் அருகே வணிக நிறுவனங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை போலீசார் பார்வையிட்டு வருகின்றனர்.
Tags:    

Similar News