செய்திகள்
கோப்புப்படம்

ஈரோடு மாவட்டத்தில் 45 குழந்தைகள் திருமணம் தடுத்து நிறுத்தம்

Published On 2019-10-04 12:02 GMT   |   Update On 2019-10-04 12:02 GMT
ஈரோடு மாவட்டத்தில் சமூக நலத்துறைக்கு வந்த புகார் தொடர்பாக இதுவரை 45 குழந்தைகள் திருமணங்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளார்கள்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் நடைபெறுவதை தடுக்க மாவட்ட சமூக நலத்துறை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக மலைப் பகுதியான அந்தியூர், பர்கூர், சத்தியமங்கலம், தாளவாடி, கடம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் குழந்தை திருமணங்கள் தொடர்பாக மலைவாழ் மக்களுக்கு விழிப்புணர்வு மேற்கொள்ளப்படுகிறது. மாவட்ட சமூக நலத்துறையும் குழந்தை திருமணங்கள் நடைபெறுவது குறித்து தகவல் கிடைத்தால் உடனடியாக அங்கு சென்று குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தி அவர்களுக்கு உரிய கவுன்சிலிங் கொடுத்து வருகிறார்கள். நடப்பாண்டில் மாவட்ட சமூக நலத்துறைக்கு குழந்தை திருமணங்கள் நடைபெறுவதாக 45 புகார்கள் வந்துள்ளது.

இதையடுத்து உடனடியாக அங்கு சென்ற அதிகாரிகள் 45 குழந்தை திருமணங்களை தடுத்தி நிறுத்தியுள்ளார்கள். இருதரப்பை சேர்ந்த பெற்றோர்களிடமும் குழந்தை திருமணம் சட்டப்படி குற்றம் என்று எடுத்துரைக்கப்பட்டு உரிய வயதிற்கு பிறகே திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து மாவட்ட சமூக நல அலுவலர் பூங்கோதை கூறுகையில், குழந்தை திருமணங்கள் தொடர்பாக எங்களுக்கு வந்த புகார்களை உரிய நேரத்தில் சென்று தடுத்து நிறுத்தியுள்ளோம். இதுவரை நடப்பாண்டில் 45 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. குழந்தை திருமணத்தின்போது இருதரப்பை சேர்ந்த பெற்றோர்களை அழைத்து திருமண வயது பெண்களுக்கு 18 வயதும், ஆண்களுக்கு 21 வயதும் இருக்க வேண்டும். அவர்களுக்கு உரிய திருமண வயது வந்த பிறகு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வருகிறோம். குழந்தை திருமணங்கள் பெரும்பாலும் வேலை செய்யும் இடத்தில் ஏற்படும் பழக்கம், உறவுகளுக்குள் திருமணம் போன்றவற்றால் ஏற்படுகிறது. குழந்தை திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறிதது அவர்களுக்கு எடுத்துரைத்து வருகிறோம்.

மேலும் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் முதியோர்களை பராமரிப்பது தொடர்பாகவும் கவுன்சிலிங் அளித்து வருகிறோம். முதியவர்கள் துன்புறுத்தப்பட்டால் வழக்குப்பதிவு செய்து அவர்களுக்கு சட்டரீதியான பாதுகாப்பை அளித்து வருகிறோம். கடந்த மூன்று ஆண்டுகளில் முதியோர்கள் துன்புறுத்தல் தொடர்பாக 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
Tags:    

Similar News