செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோவில்

சிதம்பரம் நடராஜர் கோவில் சாவியை ஒப்படைக்க வேண்டும்- சோழ மன்னர் வம்சத்தினர் மனு

Published On 2019-10-02 13:58 GMT   |   Update On 2019-10-02 13:58 GMT
கடலூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் சாவியை மீண்டும் பிச்சாவரம் சமஸ்தானத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று சோழ மன்னர் வம்சத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாசி தொழில் அதிபரின் இல்ல திருமண விழா நடந்தது. நட்சத்திர ஓட்டல் போன்று மண்டபம் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இதனை கண்டித்து பல்வேறு தரப்பினர் போராட்டம் செய்தனர். இதன் விளைவாக நடராஜர் கோவில் தீட்சிதரான பட்டு தீட்சிதர் சஸ்பெண்டு செய்யப்பட்டார். ஆனாலும் தீட்சிதர்கள் மீது பல்வேறு தரப்பினர் புகார் மனுக்களை சிதம்பரம் போலீஸ் நிலையத்தில் கொடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே செல்லப்பேட்டையில் வசித்து வரும் பிச்சாவரம் சோழ சமஸ்தானமான சூரப்பபுலிக்குத்தி சோழமன்னர் வம்சத்தை சேர்ந்த மன்னர் மன்னன் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். மனுவில் கூறி இருப்பதாவது:-

சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எங்களது மூதாதையர்களான சோழர்களால் சிதம்பரம் நடராஜர் கோவில் கட்டப்பட்டது. கோவிலை பராமரிக்க மன்னர்களால் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் நாகை, கடலூர், திருவாரூர் மாவட்டங்களில் தானமாக வழங்கப்பட்டு உள்ளது. அந்த நிலங்கள் வி.எஸ்.டி. அறக்கட்டளை மூலமாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த சொத்துக்கள் மூலமாக கிடைக்கும் வருமானம்தான் தீட்சிதர்களுக்கு உணவு, பராமரிப்பு தொகையான வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த காலங்களில் பிச்சாவரம் தீவுக்கோட்டை அரண்மனையில்தான் நடராஜர் கோவில் சாவி இருந்தது. காலையில் கோவிலை திறப்பதற்கு குதிரைபல்லக்கில் வந்து சாவியை பெற்றுசென்று பின்னர் இரவில் மீண்டும் அரண்மணைக்கு வந்து சாவி ஒப்படைக்கப்பட்டது.

எனவே மீண்டும் அதே நடைமுறையை கடைப்பிடித்து பிச்சாவரம் அரண்மனைக்கு சாவியை கொண்டுவரவேண்டும். கோவில் ஆகம விதிமீறலுக்கு காரணமான பொதுதீட்சிதர்கள் மற்றும் காரிய கமிட்டியில் உள்ள 11 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவிலை அரசுடமையாக்கி பிச்சாவரம் சோழ சமஸ்தானத்தை சேர்ந்தவரை நிரந்தர அறங்காவலராகவும், பிச்சாவரத்துக்குட்பட்ட 18 கிராமங்களை சேர்ந்தவர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர், மாவட்ட நீதிபதி, இந்து சமய அறநிலையத்துறையினரை அறங்காவலர்களாகவும் நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News