செய்திகள்
மழை

அரக்கோணம் பகுதிகளில் பலத்த மழை - 4 வீடுகள் இடிந்து நாசம்

Published On 2019-09-25 13:42 IST   |   Update On 2019-09-25 13:42:00 IST
அரக்கோணம் பகுதிகளில் பலத்த மழை காரணமாக 4 வீடுகள் இடிந்து விழுந்தது. வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தாசில்தார் தெரிவித்தார்.
வேலூர்:

வேலூர் மாவட்டம் அரக்கோணம், சோளிங்கர் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை கொட்டியதால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

அரக்கோணம் நகர பகுதிகளில் பாதாள சாக்கடை திட்ட பணிக்காக தெருக்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளது. தெருக்களில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கனமழையால் அரக்கோணம் தாலுகா மூதூர் கிராமத்தை சேர்ந்த பாஞ்சாலை மற்றும் புளியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த குப்பம்மாள் ஆகியோரது குடிசை வீடுகள் இடிந்து விழுந்தன.

வீட்டிலிருந்தவர்கள் சுதாரித்துக் கொண்டு வெளியேறியதால் அசம்பாவிதம் ஏதும் நடைபெறவில்லை.

முள்வாய்கிராமத்தில் இன்று காலை ரமேஷ் என்பவரது குடிசை வீடு இடிந்து விழுந்தது. மாங்காட்டுசேரி, மதுரா கடம்பநல்லூர் கிராமத்தில் தேவராஜ் என்பவரது ஓட்டு வீடு சுவர் இடிந்து விழுந்தது. வீட்டில் இருந்தவர்கள் வெளியேறியதால் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரக்கோணம் தாசில்தார் ஜெயக்குமார் தெரிவித்தார்.

அரக்கோணத்தில் 56 மில்லி மீட்டர் சோளிங்கர் 45 மில்லி மீட்டர் மழை பதிவானது. குடியாத்தம் பகுதிகளில் இரவு லேசான சாரல் மழை பெய்தது. இன்று காலை முதல் மாவட்டம் முழுவதும் மந்தமான தட்பவெப்ப நிலை நிலவியது. பல்வேறு இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இரவு தண்டராம்பட்டு, சேத்துப்பட்டு, கலசபாக்கம், கீழ்பென்னாத்தூர் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மற்ற இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது.

இன்று காலையில் மேகம் மந்தமாக காணப்பட்டது. லேசான சாரல் மழையும் பெய்தது மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள 2-வது பெரிய அணையான குப்பநத்தம் அணைக்கு 60 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 60 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையின் நீர்மட்டம் தற்போது 40.6 7 அடியாக உள்ளது. சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து இல்லை.

மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

ஆரணி-5.2, செங்கம்-4.6, திருவண்ணாமலை-2, தண்டராம்பட்டு-60, கலசப்பாக்கம்-19, சேத்துப்பட்டு-36, கீழ்பென்னாத்தூர்-20.2, வெம்பாக்கம்-7.

Similar News