செய்திகள்
தீக்குளிக்க முயன்ற இளம்பெண்ணை மீட்டு போலீசார் விசாரணை நடத்திய காட்சி.

வேலூர் கலெக்டர்ஆபீசில் கைக்குழந்தைகளுடன் வந்த இளம்பெண் தீக்குளிக்க முயற்சி

Published On 2019-09-23 12:56 GMT   |   Update On 2019-09-23 12:56 GMT
வேலூர் கலெக்டர்ஆபீசில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்தது. அப்போது கைக்குழந்தைகளுடன் வந்த இளம்பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர்:

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் தலைமையில் இன்று நடந்தது.

இதனையொட்டி கலெக்டர் அலுவலக வாசலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மனு கொடுக்க வந்த பொதுமக்களை சோதனைக்கு பின்னரே அனுமதித்தனர்.

கே.வி.குப்பம் அடுத்த சீதாராம்பேட்டையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரது மகள் ஷியாமளா (வயது 29). இவர் தனது 4 பெண் குழந்தைகள் மற்றும் அவரது தாய் தங்கையுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று மனு கொடுக்க வந்தார்.

கலெக்டர் அலுவலக வாசலில் திடீரென தான் கொண்டு வந்து இருந்த மண்ணெண்ணையை எடுத்து உடலில் ஊற்றினார். இதனை கண்ட போலீசார் அவரை தடுத்து நிறுத்தி அவரை மீட்டனர்.

எனது தந்தைக்கு சொந்தமான நிலம் எங்கள் வீட்டின் அருகே உள்ளது. இதனை அப்பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்துக் கொண்டு மிரட்டல் விடுக்கிறார்கள் அவர்கள் மீது புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் நாங்கள் உயிரோடு இருந்து எந்த பயனும் இல்லை என கருதி தற்கொலைக்கு முயன்றேன் என்றார்.

போலீசார் அவரை சமாதானம் செய்தனர். இதனையடுத்து அவர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து விட்டு திரும்பிச் சென்றார்.

Tags:    

Similar News