செய்திகள்
கைது

மயிலாடுதுறை அருகே பள்ளியில் விளையாடிய மாணவியை கத்தியால் குத்திய ஆசிரியர் கைது

Published On 2019-09-18 09:51 GMT   |   Update On 2019-09-18 09:51 GMT
பள்ளிக்கு வந்த மாணவியை கத்தியால் குத்திய ஆசிரியர் கைதான சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தரங்கம்பாடி:

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவில் கீழையூர் பகுதியில் அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த பவித்ரா(வயது 8) என்ற மாணவி 3-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே வகுப்பில் ஆசிரியராக செம்பனார்கோவில் திருநகர் பகுதியை சேர்ந்த பாஸ்கர் (43) என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று சிறுமி பவித்ரா வகுப்பில் விளையாடியதாக கூறப்படுகிறது. இதை பார்த்த பாஸ்கர், ‘‘படிக்க வந்தாயா? அல்லது விளையாட வருகிறாயா?’’ என்று சத்தம் போட்டார்.

மேலும் பாஸ்கர், தனது கையில் வைத்திருந்த கத்தியால் மாணவி பவித்ராவின் இடதுகையில் குத்தினார். இதனால் கையில் ரத்தம் காயத்துடன், பவித்ரா வீட்டுக்கு வந்து தனது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்தார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர், உடனடியாக மாணவியை மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே மாணவியின் தாய், செம்பனார்கோவில் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அகோரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இது தொடர்பாக ஆசிரியர் பாஸ்கரை போலீசார் கைது செய்தனர்.

பள்ளிக்கு வந்த மாணவியை கத்தியால் குத்திய ஆசிரியர் கைதான சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைதான ஆசிரியர் பாஸ்கர் எப்போதும் சின்ன கத்தியுடன் தான் பள்ளிக்கு வருவதாகவும், மாணவிகளை அடிக்க பிரம்பை பயன்படுத்த மாட்டார். அவரை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் ஆவேசத்துடன் தெரிவித்தனர்.
Tags:    

Similar News