செய்திகள்
வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் மழை தண்ணீரில் சேதமடைந்த காய்கறிகள்.

வேலூர்-திருவண்ணாமலை மாவட்டத்தில் பலத்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி

Published On 2019-09-13 07:25 GMT   |   Update On 2019-09-13 07:25 GMT
வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று மாலை 6 மணிக்கு கருமேகங்கள் சூழ்ந்தன. வேலூர் ஆற்காடு அம்மூண்டி, சோளிங்கர் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. வேலூரில் தொடர்ந்து இரவு 11 மணி வரை மழை பெய்தது. மற்ற இடங்களில் இடி மின்னலுடன் சாரல் மழை பெய்தது.

பலத்த மழை காரணமாக வேலூர் மாநகர சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வேலூர் தொரப்பாடி அரியூர் சாலை, லட்சுமி தியேட்டர், தெற்கு போலீஸ் நிலையம் கிரீன்சர்க்கிள் பகுதிகளில் சாலைகளில் அதிகளவு மழை வெள்ளம் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

லட்சுமி தியேட்டர் சிக்னலில் இருந்து கண்ணா ஓட்டல் சந்திப்பு வரை குடிநீர் குழாய்க்காக தோண்டப்பட்ட இடத்தில் தார்சாலை அமைக்கவில்லை. அங்கு குண்டும் குழியுமான மண் சாலையில் தண்ணீர் தேங்கியது. இதனால் சேறும் சகதியுமாக காட்சியளித்தது.

நேற்று மாலை 5 மணிமுதல் இரவு 7.30 மணி வரை அந்த சாலையில் வாகனங்கள் தத்தளித்தபடி சென்றன. இதேபோல் கிரீன்சர்க்கிள் பகுதியில் மழை வெள்ளத்தால் வாகன நெரிசல் ஏற்பட்டது. புதிய பஸ் நிலையத்தில் இருந்து நே‌ஷனல் சிக்னல்வரை போக்குவரத்து ஸ்தம்பித்தது.

இதுபோன்ற நெரிசலை தவிர்க்க மாநகர சாலைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் மழைநீர் பெருக்கெடுத்தது. இதனால் வியாபாரத்திற்கு தரையில் வைத்து இருந்த காய்கறிகள் வெள்ளத்தில் மிதந்தன. அவற்றை சேரிக்கும் முயற்சியில் வியாபாரிகள் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்தது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. 5 மணியளவில் திடீரென சாரல் மழை பெய்யத் தொடங்கியது. சற்று நேரத்தில் மழை வலுத்தது. தொடர்ந்து பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். 6 மணியளவில் மழையின் வேகம் குறைந்த நிலையில் இரவு 7 மணி அளவில் மீண்டும் பலத்த மழை பெய்ய தொடங்கியது.

இதேபோல செங்கம் பகுதியில் கடந்த 2 நாட்களாக சாரல் மழை பெய்து வந்த நிலையில் நேற்று இரவு மிதமான மழை பெய்தது. செங்கம், பரமனந்தல், கரியமங்கலம், பக்கிரிபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.

இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Tags:    

Similar News