செய்திகள்
சாலையோரம் விழுந்து கிடந்த மர்மப்பொருள்.

கே.வி.குப்பம் அருகே சாலையோரம் கிடந்த மர்மப்பொருள்

Published On 2019-09-10 22:00 IST   |   Update On 2019-09-10 22:00:00 IST
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே சாலையோரம் கிடந்த மர்மப்பொருளால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடியாத்தம்:

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே கவசம்பட்டு கிராமத்தில் இருந்து பவளத்துறைக்கு செல்லும் சாலை யோரத்தில் நேற்று இரவு 7 மணியளவில் ஒரு மர்மப்பொருள் கிடந்தது. அதில் இருந்து விட்டு, விட்டு மெல்லிய வெளிச்சம் வந்து கொண்டிருந்தது.

இதனை அந்த சாலை வழியாக சென்ற பொதுமக்கள் கண்டு அதன் அருகே சென்று பார்வையிட்டனர். அதில், எல்.இ.டி. பல்பு ஒன்று பச்சை கலரில் விட்டு, விட்டு எரிந்தது. அதன் அருகே நீளமான நூல் கிடந்தது. எனவே அது வெடிகுண்டாக இருக்கலாம் என்று சந்தேகம் அடைந்த பொதுமக்கள் உடனடியாக தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் உடனடியாக அங்கு சென்று அந்த மர்மப்பொருளை பார்வையிட்டனர். பின்னர் இது குறித்து உயர் அதிகாரிகள் மற்றும் தடயவியல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த மர்மப் பொருள் கே.வி.குப்பம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

சிறிது நேரத்தில் அங்கு வந்த தடயவியல் துறை நிபுணர் விஜய் அதனை ஆய்வு செய்து வானிலை மைய ஆய்வு தொடர்புடைய பொருள் என்று தெரிவித்தார். இதையடுத்து அந்த பொருள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதற்கிடையே கே.வி.குப்பம்  மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வானில் இருந்து மர்மப் பொருள் விழுந்ததாக பரவிய தகவல் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. 

இது குறித்து போலீசார் கூறியதாவது:-

சாலையோரம் கிடந்த மர்மப்பொருள் கல்லூரி மாணவர்கள் வானிலை மைய ஆய்வுக்காக பயன்படுத்திய பொருளா? என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம் என்றனர்.

Similar News