செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட சாராய பாக்கெட்டுகளை போலீசார் கீழே கொட்டி அழித்தபோது எடுத்து படம்.

சீர்காழியில் போலீசார் அதிரடி சோதனை: 20 ஆயிரம் சாராய பாக்கெட்டுகள் பறிமுதல்

Published On 2019-09-10 11:44 GMT   |   Update On 2019-09-10 11:44 GMT
சீர்காழியில் நள்ளிரவில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது வாலிபர் வைத்திருந்த 20 ஆயிரம் சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

சீர்காழி:

நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் உத்தரவின் பேரில் சீர்காழி போலீஸ் டி.எஸ்.பி. வந்தனா அறிவுறுத்தலின்படி சீர்காழி இன்ஸ்பெக்டர் சதீஷ், சப்-இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் நேற்று நள்ளிரவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது சீர்காழி புறவழிச்சாலை பனமங்கலம் ரவுண்டானா அருகே 2 மோட்டார் சைக்கிளில் மூட்டைகளுடன் இருவர் வந்தனர். போலீசார் நிற்பதை பார்த்து இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே ஒருவர் மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் தப்பி ஓட முயன்ற மற்றொருவரை விரட்டி பிடித்தனர். பின்னர் அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் சீர்காழியை சேர்ந்த பாபு (வயது 40) என தெரியவந்தது.

பின்னர் போலீசார் அங்கு நின்ற 2 மோட்டார் சைக்கிள்களில் இருந்த மூட்டைகளை பிரித்து பார்த்தனர். அதில் காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்ட பாண்டி ஐஸ் என்ற சாராய பாக்கெட்டுகள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மூட்டைகளில் சுமார் 20 ஆயிரம் சாராய பாக்கெட்டுகள் இருந்தன. இதன் மதிப்பு ரூ.1½ லட்சம் என கூறப்படுகிறது.

இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட சாராய பாக்கெட்டுகளை போலீசார் கீழே கொட்டி அழித்தனர்.

புதுச்சேரி மாநிலத்தில் இருந்து பாண்டி ஐஸ் சாராய பாக்கெட்டுகள் கடத்தி வரப்படும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. எனவே போலீசார் இரவு நேரங்களில் நாகை மாவட்ட எல்லையோர பகுதிகளில் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News