செய்திகள்
கொலை செய்யப்பட்ட சாமியார் தத்துவானந்தா

புதுவையில் அடுக்குமாடி குடியிருப்பில் சாமியார் வெட்டிக்கொலை

Published On 2019-08-29 15:44 IST   |   Update On 2019-08-29 15:44:00 IST
புதுவையில் நள்ளிரவில் அடுக்குமாடி குடியிருப்பில் புகுந்த ரவுடி கும்பல் சாமியாரை வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பி சென்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி:

புதுவை பழைய சாரம் மொட்டத்தோப்பு அண்ணாமலை நகரில் கோகுலம் அப்பார்ட்மென்ட் என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.

5 மாடிகள் கொண்ட இந்த குடியிருப்பில் 13 வீடுகள் உள்ளன. இதில், தரை பகுதி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் தத்துவானந்தா (வயது 60) என்ற சாமியார் தனியாக வசித்து வந்தார்.

இவரது சொந்த ஊர் வில்லியனூர் அருகே உள்ள ஒதியம்பட்டு ஆகும். அங்கு ஆசிரமம் நடத்தி வருகிறார். இரவு நேரத்தில் அண்ணா மலை நகர் வீட்டுக்கு வந்து விடுவார். அவர், அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகியாகவும் செயல்பட்டார்.

குடியிருப்பில் ஆறுமுகம் என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு அந்த பகுதியை சேர்ந்த 5 ரவுடிகள் அடுக்கு மாடி குடியிருப்புக்கு வந்தனர்.

அவர்கள் காவலாளி ஆறுமுகத்தை தாக்கி அங்கிருந்து ஓடி விடும்படி கூறினார்கள். இதனால் பயந்து போன அவர் அங்கிருந்து சென்று விட்டார்.

அதன்பிறகு அவர்கள் கீழே உள்ள கார் ஷெட்டில் அமர்ந்து மது குடித்தனர். வெளியே சென்று விட்ட காவலாளி ஆறுமுகம் அதிகாலை 3 மணி அளவில் அங்கு திரும்பி வந்து தொடர்ந்து காவல் பணியை செய்தார்.

சாமியார் தத்துவானந்தா தினமும் காலையிலேயே எழுந்து விடுவது வழக்கம். ஆனால், இன்று காலை 10 மணி வரையிலும் அவர் எழுந்திருக்கவில்லை. மேலும் அவருக்கு கொண்டு வரப்பட்ட பால் பாக்கெட் எடுக்கப்படாமல் வெளியே கிடந்தது.

எனவே, சந்தேகம் அடைந்த காவலாளி ஆறுமுகம் கதவை தட்டிப்பார்த்தார். கதவு திறக்கப்படவில்லை.

இதுபற்றி கோரிமேடு போலீசுக்கு தகவல் கொடுத்தார். இன்ஸ் பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலையரசன், திருமுருகன் ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர்.

கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. அதை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது வீட்டின் 2 அறைகளுக்கு மத்தியில் உள்ள பாதையில் சாமியார் தத்துவானந்தா கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது தலை மற்றும் உடல்களில் வெட்டு காயங்கள் இருந்தன.

கீழே மது குடித்த ரவுடிகள் சாமியார் வீட்டுக்குள் நுழைந்து அவரை கொலை செய்து விட்டு பணத்தை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது. அவர்களே வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளனர்.

சீனியர் சூப்பிரண்டு ராகுல் அல்வால், சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.

கொலையில் ஈடுபட்ட அந்த ரவுடி கும்பல் யார்? என்ற விவரம் தெரிய வில்லை. அவர்கள் அனைவருமே அந்த பகுதியை சேர்ந்தவர்கள், கஞ்சா பழக்கத்துக்கு அடிமையானவர்கள் என்று கூறப்படுகிறது.

அவர்கள் யார்? என விசாரித்து வருகிறார்கள். அவர்களை கைது செய்த பிறகுதான் கொலைக்கான முழு விவரமும் தெரியவரும்.

Similar News