செய்திகள்
திருமாவளவன்

அம்பேத்கர் சிலையை உடைத்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் - திருமாவளவன்

Published On 2019-08-27 07:19 GMT   |   Update On 2019-08-27 07:19 GMT
வேதாரண்யம் பகுதியில் அம்பேத்கர் சிலையை உடைத்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
ஆலந்தூர்:

லண்டனிலிருந்து சென்னை திரும்பிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

வேதாரண்யம் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாகவே அம்பேத்கர் சிலையை அப்புறப்படுத்த வேண்டும் என்று சாதி வெறி பிடித்த கும்பல் தொடர்ச்சியாக முயற்சித்து வந்தனர்.

அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அந்த சிலையை அகற்றக்கூடாது என்ற ஆணை பெற்று யாருக்கும் இடையூறு இல்லாமல் இருக்கிறது.

போக்குவரத்திற்கு இடையூறு என்பது அப்பட்டமான பொய். தேரை இழுத்துச் செல்லும் நேரத்தில் இடைஞ்சலாக இருக்கிறது என்று சொல்லுவது தவறான கருத்து.

வேண்டுமென்றே அந்த சிலையை அப்புறப்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு முன்கூட்டியே தயாரிப்போடு நூற்றுக்கணக்கானவர்கள் ஒன்றுகூடி காவல் நிலையத்திற்கு அருகிலேயே இந்த அநாகரிகத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள்.

இந்திய தேசத்தின் அரசியல் அமைப்பு சட்டத்தை வகுத்து தந்த ஒரு மாமேதை உலகளாவிய புகழ் பெற்ற ஒரு தத்துவ சிந்தனையாளர், சிறந்த சமூக நீதிப் போராளி, அவருடைய சிலையை அவமதிக்கும் வகையில் அந்த சிலையின் தலைப்பகுதி முதலில் உடைத்து விட்டு,பிறகு முழு சிலையும் கடப்பாரையால் தகர்த்திருக்கிறார்கள்.



அதுவரையில் காவல் துறை அவர்களை அப்புறப்படுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஒரு சாலை மறியல் செய்தால் கூட உடனடியாக காவல்துறை வந்து அப்புறப்படுத்துகின்றனர்.

ஆனால் ஒரு தேசிய தலைவரின் திருவுருவச்சிலையை பட்டபகலில் காவல் நிலையத்தின் அருகே திரண்டு வந்து மணிக்கணக்கில் அதை தாக்கி தகர்த்து தரைமட்டமாக்கும் வரையில் காவல்துறை என்ன செய்தது? அதற்கு காரணமான காவல்துறை அதிகாரி மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உடனடியாக சிலையை தமிழக அரசு நிறுவியது ஆறுதல் அளிக்கிறது. ஆனால் சிலையை நிறுவியது மட்டுமே அதற்குரிய தீர்வாகாது.

இந்த அநாகரிகத்தை அரங்கேற்றியவர் அத்தனை பேர் மீதும் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வேடிக்கை பார்த்த அல்லது உடந்தையாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது குண்டர் சட்டத்தில் சிறைபடுத்தப்பட வேண்டும்.



இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இந்த அநியாயம் கிடையாது. அதனால் இத்தகைய அநாகரீக செயல்கள் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News